Ranipet: ராணிப்பேட்டை தொகுதியில் நான் போட்டியில்லை! அமைச்சர் காந்தி மகன் வினோத் அறிவிப்பு!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டசபை தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். மேலும் என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் Udhayanidhi Stalin அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்.
வினோத் காந்தி
மாநில துணை செயலாளர்- திமுக சுற்றுசூழல் அணி
இவ்வாறு தனது பதிவில் வினோத் காந்தி தெரிவித்திருந்தார். கட்சியில் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என அமைச்சர் காந்தி அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது தந்தைக்காக மகன் விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
தமி ழக சட்டசபைத் தேர்தல் ஏப் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்தி வேட்பாளராக களமிறங்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது மகனுக்கு சீட் வேண்டாம், மீண்டும் தனக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் காந்தி, திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
காந்திக்கு 80 வயதாகிறது. எனினும் அவர் மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுகவிடம் சீட் கேட்டுள்ளார். ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டும், அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதை கருதியும் திமுக தலைமை அவருக்கு சீட் வழங்காமல் மகன் வினோத்திற்கு சீட் வழங்கியது.
தனது மகனுக்கு சீட் வழங்கியிருந்தாலும் அதில் காந்திக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து திமுக தலைமைக்கு தொடர்ந்து அவர் கோரிக்கை வைத்து இருந்தார்.
ஆனால் வேட்பாளர் மாற்றம் குறித்து திமுக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற போதிலும் வினோத் காந்தி இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியின் கோட்டை என சொல்லப்படுகிறது. இங்கு அவர் 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதாவது 20 ஆண்டுகள் ராணிப்பேட்டைக்கு எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் 2011, 2001 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடைந்தார். தற்போது இந்த தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக களம் காண்கிறது. பாஜக சார்பில் விஎம் கார்த்திகேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாரிகா சல்மான் மற்றும் தவெக சார்பில் தாஹீரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications