லண்டனுக்கு பறந்த அமைச்சர் ஐ.பெரியசாமி! கோட்சூட்டில் சும்மா ஸ்டைலா வைரலாகும் போட்டோ! என்ன காரணம்?
சென்னை : தேனி அருகே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில், அதனைத் திறந்து வைப்பதற்காக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றிருக்கும் நிலையில், அவர் கோட்சூட்டுடன் இருக்கும் படங்களை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ளது இந்த அணையின் மூலம் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நேரடியாகவும் சில மாவட்டங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.
ஆங்கிலேய அரசின் கட்டுமானப் பொறியாளராக இருந்த இராணுவப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் அவரது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்று அவரது சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

கர்னல் பென்னிகுவிக்
இந்நிலையில் தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கை தேனி மாவட்ட மக்கள் தெய்வம் போலவே வணங்கி வருகின்றனர். மேலும் அவரது பிறந்தநாள் விழாவானது ஆண்டு தோறும் திருவிழா போலவே தேனியில் கொண்டாடப்படும்.

சிலை திறப்பு விழா
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்காக தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்ற நிலையில், கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி இலண்டனில் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
இதற்கான லண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் லண்டன் வாழ் தமிழர்களால் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார். நேற்று இரவு 2 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் கிளம்பி சென்றார். அவரை திமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

கோட்சூட்டில் கலக்கல்
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் செல்வதற்காக நீல கலர் கோட் சூட்டில் இருக்கும் புகைப்படங்களை திமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் இருக்கும் ஐ.பெரியசாமி எப்போதுமே வெள்ளை வேட்டி சட்டையில் தான் காட்சி தருவார். வழக்கறிஞரான அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு கோட் சூட்டில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது வேட்டி சட்டையில் மட்டுமல்ல கோட் சூட்டிலும் அமைச்சர் மாஸாக இருக்கிறார் என்கின்றனர் திண்டுக்கல் திமுகவினர்.












Click it and Unblock the Notifications