எங்க ஊர் மாப்பிள்ளை..ஈட்டிக்கு மார்பை காட்டும் உதயநிதி..துண்டுச் சீட்டில் எழுதி படித்த பெண் அமைச்சர்!
சென்னை: எங்க ஊர் மாப்பிள்ளை, ஈட்டிக்கு மார்பை காட்டும் உதயநிதி என பெண் அமைச்சர் கயல்விழி ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து படித்த சுவாரஸ்ய சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் முதல்வராக செயல்படுவதாக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். இலவச பஸ் பயணம், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகளை அவர் வெளியிட்ட நிலையில் கடைகளில் ஊழியர்கள் உட்கார்ந்து பணியாற்றும் ஆணையையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் இவர் வெளியிட்ட இரு விஷயங்கள் வெளிமாநிலம் (சாம்னா) மற்றும் வெளிநாட்டு (தி டெலிகிராப்) பத்திரிகைகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள இலவச புத்தக பைகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் புகைப்படமும் இருந்தன.

ரூ 18 கோடி
இந்த பைகளுக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலினின் படத்தை போட ரூ 18 கோடி செலவாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் படமே இருந்துட்டு போகட்டும். அந்த 18 கோடியை வேறு ஒரு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துவிட்டார்.

பொதுமக்கள் பாராட்டு
இதை எதிர்க்கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கருணாநிதி தொடர்பான பதிவுகளை நீக்க அப்போதைய அதிமுக அரசு ரூ 33 கோடி செலவிட்டதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஸ்டாலினின் செயல்பாட்டையும் ஒப்பிட்டு பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

மக்கள் பிரச்சினை
அது போல் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசும் திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினை பாராட்டி புகழ்ந்து பேசி வந்தனர். இதை ஸ்டாலின் கண்டித்துள்ளார். தன்னை இனி எந்த திமுக எம்எல்ஏவும் புகழ்ந்து பேசக் கூடாது. மாறாக தங்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசினால் போதும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

திருப்பூர் அமைச்சர்
ஸ்டாலினின் இந்த இரு விஷயங்களும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து விட்டது. இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த பெண் அமைச்சர் கயல்விழி, சட்டசபையில் உதயநிதியை பாராட்டி பேசிய வீடியோவை அதிமுகவினர் வைரலாக்கி வருகிறார்கள். அவர் பேசுகையில் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தபோது 30 நிமிடங்களுக்கு மேல் எனக்காக பிரச்சாரம் செய்து எனது வெற்றிக்கு காரணமாக இருந்த ஈட்டிக்கு மார்பை காட்டும் கூட்டத்தின் தலைவர், லட்சக்கணக்கான இளைஞர்களின் இயந்திர துப்பாக்கி சேப்பாக்கம் எம்எல்ஏ, எங்கள் ஊரின் மாப்பிள்ளை அன்பு சகோதரர் உதயநிதி என ஒரு பேப்பரை பார்த்து கயல்விழி படித்திருக்கிறார்.

கமென்ட்
இது போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது உதயநிதியின் இருக்கைக்கு சென்று பெரும்பாலான திமுக எம்எல்ஏக்கள் வணக்கம் சொன்ன வீடியோவும் வைரலானது. இந்த நிலையில் உதயநிதியை ஒரு பெண் அமைச்சர் பாராட்டும் வீடியோவை பார்க்கும் சிலர் இதற்கு ஸ்டாலின் எப்படி அனுமதித்தார் என கேள்வி எழுப்புகிறார்கள். இந்த வீடியோவை வெளியிட்ட அதிமுகவின் ட்விட்டரில் பலர் கமென்ட் போட்டுள்ளார்கள்.
|
விளம்பரம்
அதில் அய்யோ.. அய்யோ.. சட்டமன்றமா? நாடக கம்பெனியா? என்றே தெரியவில்லையே.. நடிகர்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொண்டே இருப்பார்கள்... அப்பதான் அவர்கள் படம் ஓடும்.. விளம்பரத்திற்காக சட்டமன்றத்தையா? பயன்படுத்துவது என்கிறார் இந்த வலைஞர்.
|
இதில் என்ன தவறு
சட்டசபையில் என்னை புகழ்ந்து பேசக்கூடாது என்று ஸ்டாலின் சொன்னது அவருக்கு மட்டுமே பொருந்தும் உதயநிதிக்கு பொருந்தாது என்கிறார் இந்த நெட்டிசன்.

பாராட்டக் கூடாது
இந்த நெட்டிசன் சொன்னது போல்தான் பெரும்பாலானோர் சொல்கிறார்கள். திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக உதயநிதி வலம் வருகிறார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றில் அவர் கடுமையாக உழைத்து திமுக கூட்டணி வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார். எய்ம்ஸ் செங்கலை எடுத்து காட்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து அவரை போல் பீகார் மாநிலத்தில் எய்ம்ஸ் செங்கல்லை காட்ட வழிவகுத்தவர். தமிழகத்திற்கு கொரோனாவுக்கு நிதியை திரட்டியுள்ளார். எனவே ஸ்டாலின் தன்னை தானே பாராட்டக் கூடாது என்றால், அதனால் உதயநிதியை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை என உடன்பிறப்புகள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications