எப்படி மழை அடிச்சாலும் சென்னை அசராது: கிண்டியில் மழைநீர் தேங்கியதற்கு காரணம் சொன்ன அமைச்சர் KN நேரு!
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 20 செ.மீ மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் அளவுக்கு பணிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காலை முதல் சென்னை உட்பட ஏராளமான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய சாலைகளில், மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்றதன் காரணமாக மழைநீர் தேங்கவில்லை.

அமைச்சர்கள் விசிட்: இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் கே.என்.நேரு.
அப்போது அமைச்சர் நேரு பேசுகையில், "சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் நீர் அகற்றப்படும். கடந்த 2 நாட்களில் 11 செ.மீ மழை பதிவாகி இருந்தாலும் கூட தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனி சென்னையில் மழைநீரே தேங்காது: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 2 சதவீத பணிகள் தான் மீதமிருக்கின்றன. எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு அனைத்து அதிகாரிகளும் கவனித்து வருகிறார்கள். நேற்று ஆலந்தூரில் மட்டும் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு 9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஒரே நேரத்தில் கனமழை இது போன்ற நேரங்களில் தான் தண்ணீர் அதிகமாக தேங்குகிறது. ஆனால் 1 மணி நேரத்தில் அங்கும் தண்ணீர் வடிந்துவிட்டது.
இதை விட கூடுதலாக, 20 செ.மீ மழை பெய்தால் கூட 1 மணி நேரத்தில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரிக்கும் போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, மரக்கிளைகள் முறிந்து விழுந்தால் அதனை அகற்றுவது, தண்ணீர் தேங்கினால் அதனை அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள், பைப்லைன் அடைத்திருந்தால் அகற்றுவதற்கு என அனைத்தும் தயாராக இருக்கிறது.
கிண்டியில் தேங்க காரணம்: நேற்று ஆலந்தூர் பகுதியில் ஒரே நேரத்தில் 9 செ.மீ மழை பெய்ததால் கிண்டி ரேஸ்கோர்ஸ் காரர்கள் எல்லா மழைநீரையும் சாலையில் திறந்துவிட்டு விட்டனர். அதனால் தான் சாலையில் அதிகம் தண்ணீர் வந்தது. உடனே மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று சரி செய்து விட்டார்கள்.

மழை நீர் தேங்கினால் அகற்றுவதற்காக மொத்தம் 29 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மழைநீர் தேங்கினாலும் அதை உடனே அகற்றுவதற்கான 503 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் மற்றும் கழிவு நீர் கலக்காமல் இருக்க ஏற்கனவே சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் 1000 கோடி ரூபாய் செலவில் எந்த இடங்களில் எல்லாம் பழுது ஏற்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சுரங்கப் பாதைகளில்: சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. தற்போது மழைக்காலத்தில் பள்ளம் தோண்டினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக கடந்த 2 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீரை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1,500 லாரிகள் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாகவும் தண்ணீர் வழங்கப்படும்.

தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு குடிநீரை தயார் செய்து வைத்துள்ளோம். கூடுதலாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம். தொடர்ந்து சென்னையை சுற்றியுள்ள ஏரிகளை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம். எனவே சென்னையை பொறுத்தவரை குடிநீர் பிரச்சனையே இருக்காது" என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.












Click it and Unblock the Notifications