"உள்ளூர்லயே விலை போகமாட்டாரு".. பிரசாந்த் கிஷோரை விமர்சித்த அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், உள்ளூரிலேயே விலை போகாத பிரசாந்த் கிஷோரை தமிழக வெற்றிக் கழகத்தினர் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றனர் என்று அமைச்சர் கே.என். நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கெட் அவுட் என்ற பதாகையில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பதாகையில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், பிரசாந்த் கிஷோருக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பெரியார் சிலையை தவெக தலைவர் விஜய் பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 2026 தேர்தலையொட்டி எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் குறித்து விஜய் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் ரீதியான பல்வேறு முக்கிய முடிவுகளை தவெக விஜய் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் தமிழக அரசியலில் ஒரு சில கட்சிகளுக்கு கடந்த காலத்தில் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார். அதேபோல, 2026 தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரசாந்த் கிஷோருடன் நேற்று தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
பிரசாந்த் கிஷோர், விஜய் இணைந்து பணியாற்றுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சேரப் போகிறார் என்று கூறினார்கள். உள்ளூரிலேயே விலை போகாத பிரசாந்த் கிஷோரை இங்கு வரவழைத்துள்ளார்கள்.
பீகார் தேர்தலில் போட்டியிட்டு பிரசாந்த் கிஷோரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. ஆனால், அவர் இங்கு வந்து தேர்தல் வியூகம் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்களது வெற்றி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
திமுகவில் பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே பணியாற்றிவிட்டுதான் தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற போயிருக்கிறார். அவரை எப்படி எதிர்கொள்வது என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். திமுகவை முதல்வர் ஸ்டாலின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்றார்.












Click it and Unblock the Notifications