எனக்கு திருச்சிக்குள் 100 ஏக்கர் இருக்கு! அன்று கட்சி நோட்டீஸில் 63வது இடத்தில் என் பெயர்! -KN நேரு
சென்னை: தனக்கு திருச்சிக்குள்ளேயே 100 ஏக்கர் இடம் இருப்பதாகவும் அன்று கட்சி நோட்டீஸில் தனது பெயர் 63வது இடத்தில் இருந்ததாகவும் பேசியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நேரு, கருணாநிதி குறித்த நினைவலைகளை பகிர்ந்ததோடு தன்னை எப்படியெல்லாம் அவர் கட்சியில் வளர்த்துவிட்டார் என்பது குறித்தும் பேசினார்.

1989ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தவர் முரசொலி மாறன் தான் என்றும் திமுக அமைச்சரவையில் நேரு என்ற பெயர் கொண்டவர் இருக்கட்டும் என்று சொல்லி முரசொலி மாறன் தான் தனக்காக கருணாநிதியிடம் சிபாரிசு செய்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சரவையில் அப்போது 14வது இடத்தில் இருந்த தன்னை கருணாநிதி அழைத்து அருகில் உட்கார வைத்து, எப்படி நீ ஃபைல் பார்ப்பாய், சொல்லு எனக் கேட்ட போது அதிகாரி கையெழுத்து போட்டால் போட்டுவிடுவேன் என்று கூறியதாகவும் அப்படி இருக்கக் கூடாது என்று சொல்லி எப்படி ஃபைல் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி எனவும் உருகினார்.
மிசா காலத்திற்கு பிறகு கருணாநிதி கல்லக்குடிக்கு திமுக கொடியேற்ற வந்ததாகவும் அப்போது நோட்டீஸில் தனது பெயர் 63வது இடத்தில் இருந்ததாகவும் நேரு தெரிவித்தார். அப்படியிருந்த தாம் இன்று திமுகவின் முதன்மைச் செயலாளராக ஆகியிருப்பதை அவர் சூசகமாக தெரிவித்தார்.
ஒரு முறை திருச்சியில் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த கருணாநிதி, 7.15 விடுதி அறையிலிருந்து புறப்படுவார் என எதிர்பார்த்த போது 6.45 மணிக்கெல்லாம் பொதுக்கூட்ட மேடைக்கு போகலாம் என தயாராகி விட்டதாகவும் அப்போது அவரிடம் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று கூறிய போது, சின்னப் பையனை நம்பி கொடுத்தது தவறாக போச்சே எனத் தன்னை திட்டியதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதனால் தனக்கும் கோபம் வந்துவிட்டதாகவும் சரி வாங்க போகலாம் என கருணாநிதியை அழைத்துச் சென்று போய் ஒரு பெரிய கூட்டத்தை காட்டிய பிறகு, மேடையில் இருந்து இறங்கும் போது விடுய்யா பார்த்துக்கலாம் என்று கருணாநிதி தன்னை பாராட்டிவிட்டு சென்றதை நினைவுகூர்ந்தார்.
இதனிடையே இப்போது சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்றும் இதே திருச்சியில் வைத்திருந்தால் தன்னிடமே திருச்சிக்குள் 100 ஏக்கர் நிலம் இருக்கு என எதையும் ஒளிவு மறைவின்றி பேசினார் அமைச்சர் நேரு.












Click it and Unblock the Notifications