கடமை தவறாத செவிலியர்கள்.. பாராட்டிய அமைச்சர் மா.சு... மாதவரத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
சென்னை: மாதவரம் பகுதியில் சனிக்கிழை இரவு நேரத்திலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் கடமை தவறாமல் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டிருந்த செவிலியர்களை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டினார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறையக் குறைய அதற்கு ஏற்பட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேக்சின் பணிகள்
தற்போது வரை எந்த நாடும் கொரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதேநேரம் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வேக்சின் பணிகள் மூலம் பல்வேறு நாடுகளும் வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளன. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் போட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு
இதுவரை நாட்டில் 100 கோடிக்கும் அதிகமாக வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் தடுப்பூசி குறித்து மக்களிடையே சற்று தயக்கம் நிலவினாலும் கூட, 2ஆம் அலைக்குப் பின் தயக்கம் முற்றிலுமாக நீங்கியது. பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வேக்சின் செலுத்திக் கொள்ளத் தொடங்கினர்.

மெகா தடுப்பூசி முகாம்
பொதுமக்கள் வேக்சின் செலுத்துதிக் கொள்வதை எளிமையாக்கும் வகையில் மாநிலத்தில் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நிலையில், அசைவம் சாப்பிடுபவர்கள் ஞாயிறுகளில் தடுப்பூசி செலுத்தத் தயக்கம் காட்டுவதால் கடந்த முறை சனிக்கிழமை மெகா வேக்சின் முகாம் நடைபெற்றது. 7ஆவது தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது இருப்பினும், மழை உள்ளிட்ட பல காரணங்களால் 17.14 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

தமிழ்நாடு வேக்சின் பணிகள்
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வேக்சின் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற இங்குள்ள சுகாதார ஊழியர்களே முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டின் சுகாதார பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாலேயே குறைவான நாட்களில் அதிக பேருக்கு வேக்சின் செலுத்த முடிகிறது. மேலும், இந்தியாவில் குறைவான வேக்சின் வேஸ்டேஜ்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது.

அமைச்சர் மா.சு பாராட்டு
இந்நிலையில், மாதவரம் பகுதியில் சனிக்கிழை இரவு நேரத்திலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் கடமை தவறாமல் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டிருந்த செவிலியர்களை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டினார். இது குறித்து அமைச்சர் மா. சு தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று இரவு 8 மணிக்கு மாதவரம் பகுதியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து விட்டு வரும்போது கீழ்ப்பாக்கம் அருகே நடைபாதையில் இரு சகோதரிகள் தடுப்பூசி பணிமுடித்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கடமை உணர்வை பாராட்டி விரைந்து வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்திவிட்டு நகர்ந்தோம்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications