தமிழ்நாட்டில் 11,538 பேருக்கு டெங்கு காய்ச்சல்.. புள்ளி விவரங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் டெங்கு பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே பரவி வருவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது. தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. டெங்கு பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, அனைத்து துறை அலுவலர்களும் எடுத்த முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டதுமே மருத்துவமனையை நாடாமல் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைக்கு வந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது.
தினமும் தமிழ்நாட்டில் சுமார் 500 டெங்கு பாதிப்பு கேஸ்கள் பதிவாகின்றன. நேற்று நிலவரப்படி ஒரே நாளில் 205 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
