"இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் தீவிர பாதிப்பு.." பளிச் என கூறிய அமைச்சர் மா.சு.. ஏன் முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
தினசரி வைரஸ் பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடுள்
தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் மட்டும் அது செவ்வாய்கிழமை, ஜன. 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிரக் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கும் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், காணும் பொங்கல் நாளான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு
பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிரத் தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையிலும் சிறப்புச் சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மருத்துவம் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தனர்.

வீட்டுத் தனிமையில் சிகிச்சை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதிலும் அவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதில்லை. அவர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் இப்படி 37,991 பேர் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டுத் தனிமையில் உள்ளவர்களைச் சென்னை மாநகராட்சி மூலம் கண்காணிக்க உள்ளோம். இதற்காக 1535 களப்பணியாளர்களை கொரோனா பணிக்காகப் பயன்படுத்தவுள்ளோம்.

கொரோனா படுக்கை
மாநிலத்தில் இப்போது மொத்தம் 1.91 லட்சம் படுக்கைகள் உள்ளன. அதில் 8912 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நந்தம்பாக்கம் சிகிச்சை மையத்தில் மட்டும் 950 படுக்கைகள் உள்ள நிலையில், அதில் 350 படுக்கைகள் முன்களப் பணியாளர்களான அரசு அலுவலர்கள், காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரும் சிகிச்சை பெறும் அளவுக்கு மோசமான நிலையில் இல்லை.

யாருக்கு தீவிர பாதிப்பு
கொரோனா வேக்சின் மட்டும் தான் இப்போது இருக்கும் சூழலில் பொதுமக்களைக் காக்கும் ஒரே ஆயுதம். தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை சுமார் 50,000 மையங்களில் 19ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் யாரும் உயிரிழக்கும் நிலைக்குச் செல்லவில்லை. வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது ,இதை உணர்ந்து மக்கள் அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்,

ஏன் முக்கியம்
பொங்கல் கொண்டாட்டங்களை விட உயிர் முக்கியம். எனவே மக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்த்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார். கொரோனா வேக்சின் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் உள்ள தரவுகளை வைத்துக் குறிப்பிட்டுள்ளார். இது வேக்சின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications