சாப்டாதீங்க..! ஷவர்மா வெளிநாட்டு உணவு! நமக்கு செட்டாகாது! சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை : ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு, மாணவர்கள் உடல்நல பாதிப்பு போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
கேரளா மாநிலம் காசர்கோட்டில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள நிலையில், அவருடன் சேர்ந்து அங்கு ஷவர்மா சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய நிலையில், கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஷவர்மா விவகாரம்
ஷவர்மா விவகாரம் பெரும் பேசு பொருளாகியுள்ள இந்த சூழலில், கடந்த இரு நாட்களுக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் இரவு துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டதாகவும், இரவில் புட் பாய்சன் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு சென்றனர்.

ஷிகெல்லா பாக்டீரியா
கோடை வெயிலில் இறைச்சியை போல் மயோனைஸ் உணவிலும் பாக்டீரியா பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், முறையாக வேக வைக்காத ஷவர்மா போன்ற இறைச்சி உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய், உயிரிழப்பு அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் 17 வயது மாணவி ஷவர்மா சாப்பிட்டபோது, அதிலிருந்த ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பால் தான் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள்
கோடை துவங்கியுள்ள நிலையில் இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் நபர்கள் பல்வேறு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு கோடை வெயிலால் இறைச்சிகளில் ஏற்படும் பாக்டீரியா பாதிப்பு, முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை கடைகளில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அமைச்சர் எச்சரிக்கை
இந்நிலையில் ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரியவழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது, எனவே ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications