வெள்ளத்தில் கிடைத்தவரை லாபம் .. பாலுக்கு கூடுதல் விலை.. நடவடிக்கை பாயும்.. மனோ தங்கராஜ் வார்னிங்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். பால் தட்டுப்பாடு காரணமாக மக்களின் தேவையை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கின. குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ காலனி, மூகாம்பிகை நகர், குட்வில் நகர், கண்ணன் அவென்யூ, தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலை, தாம்பரம் - தர்காஸ் பிரதான சாலை கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது,

லட்சுமி நகர், பாரதி நகர், பழைய பெருங்களத்தூர், பழைய ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, ராஜகீழ்ப்பாக்கம், திருமலை நகர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, ராதா நகர், நெமிலிச்சேரி, பல்லாவரம் - குன்றத்துார் சாலை, முடிச்சூர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு குடிநீர், பால், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையின் நகரப்பகுதிகளிலேயே பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் பால் கிடைக்காத காரணத்தால் தனியார் பால் வாங்கப்போனால் அரை லிட்டர் பால் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மூன்றாவது நாளாக இன்றைக்கும் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனை காரணமாக வைத்து கடைக்காரர்கள் பலரும், ஆவின் பால் 1 லிட்டர் ரூ.100, ரூ.120 என கடுமையாக விலையை உயர்த்தி விற்பனை செய்துவருவதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தனியார் பால் விற்பனை செய்யும் கடைகளிலும் பால் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். ஆவின் பால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்து வருகிறது. இதனையடுத்து களமிறங்கிய மனோ தங்கராஜ், இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலைமை நன்கு சீரடைந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாகப் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், கூடுதல் விலைக்கு யாரேனும் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆவின் பால் & தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். #ChennaiRains #AavinForHealthyTN
— Mano Thangaraj (@Manothangaraj) December 6, 2023
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஆவின் பால் & தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications