புகழ் பாடாதீங்க.. கேள்வி என்னவோ அதை மட்டும் கேளுங்க! ஆர்.பி.உதயகுமாரிடம் சபாநாயகர் அப்பாவு கறார்!
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கினார்.
மேலும், புகழ்பாடுவதை விட்டுவிட்டு கேள்வி என்னவோ அதை மட்டும் கேட்குமாறு ஆர்.பி.உதயகுமாரிடம் சபாநாயகர் அப்பாவு கறார் காட்டினார்.
இதனால் முகம் வாடிப்போன ஆர்.பி.உதயகுமார், வேறுவழியின்றி டக்கென தனது கேள்விக்கு வந்தார்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் 3ஆம் நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு முன்னதாக ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். சபை தொடங்கியதும் முதல் கேள்வி எழுப்பும் வாய்ப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு தந்த சபாநாயகர் அப்பாவு அவரது புகழ்புராணத்தால் டென்ஷன் ஆனார்.

கேள்வி என்னங்க
புகழ்பாடி நேரத்தை வீணடிக்க வேண்டம் என கண்டிப்பு காட்டிய சபாநாயகர் அப்பாவு, என்ன கேள்விவோ அதை கேளுங்க என கறாராக கூறினார். மேலும், நீங்க புகழ் புராணம் பாடும் நேரத்தில் மற்றவர்கள் இருவருக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை தரலாம் என நேரத்தின் அவசியம் குறித்து பாடம் எடுத்தார். இதனால் முகம் வாடிப்போன ஆர்.பி.உதயகுமார், வேறுவழியின்றி டக்கென தனது கேள்விக்கு வந்தார். திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டம் வருமா என வினவினார்.

அமைச்சர் நேரு
இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, திருமங்கலம் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால் அதில் திருப்தி அடையாத ஆர்.பி. உதயகுமார் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, பாதாள சாக்கடை திட்டம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை என்றும் இன்று காலை அதிகாரிகளிடத்தில் பேசிய போது பாதாள சாக்கடை திட்டத்துக்கு 400 கோடி வரை செலவாக கூடும் என்று கூறியதாகவும் அதை பராமரிக்கக் கூடிய அளவுக்கு வருவாய் வருமா என்பதை எல்லாம் கண்டறிய வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

செய்து கொடுப்போம்
செய்து கொடுக்கக் கூடாது என்பது தங்களின் நோக்கமல்ல என்றும் ஆனால் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்றால் அதற்கு பல நடைமுறைச் சவால்கள் இருக்கிறது எனவும் அமைச்சர் நேரு பேசினார்.












Click it and Unblock the Notifications