சென்னை பெருநகரில் 50 திட்டங்கள்.. சிஎம்டிஏ வரலாற்றில் முதல் முறை.. சேகர்பாபு சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும வரலாற்றில் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே ஆண்டில் அதிக டெண்டர் விடப்படுவது இதுவே முதல்முறை என சிஎம்டிஏ அமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையை தாண்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வரை சென்னை பெருநகரம் வளர்ந்துள்ளது. இந்த பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிஎம்டிஏ என்று அழைக்கப்படும் இந்த துறையின் அனுமதி இல்லாமல் வீடு கட்ட முடியாது, நிலத்தில் பிளாட் போட முடியாது.

வணிக வளாகங்களை அமைக்க முடியாது. எந்த நிறுவனம் தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் சிஎம்டிஏ அனுமதி கண்டிப்பாக வாங்க வேண்டும். சிஎம்டிஏ தான் சென்னை நகரம் வளர வளர அங்கு என்ன வளர்ச்சி திட்டங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கிறது. சுருக்கமாக சொல்வது என்றால், சென்னை பெருநகரத்திற்கு முழு அதிகாரம் படைத்த துறை என்றால் அது சிஎம்டிஏ தான். சிஎம்டிஏ துறைக்கு தனியாக அமைச்சரும் இருக்கிறார்.. அவர் தான் அமைச்சர் சேகர்பாபு..
இந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு சிஎம்டிஏ துறை அமைச்சராக உள்ளார். கடந்த எடப்பாடி ஆட்சியில் இந்த துறை ஓ பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சரி விஷயத்திற்கு வருவோம்.. சென்னை பெருநகர வளர்ச்சி குழும வரலாற்றில் ஒரே ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 2021 முதல் இதுவரை அறிவிக்கப்பட்ட 50 திட்டங்களுக்கான டெண்டர்களை அடுத்த மாத இறுதிக்குள் முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், " சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) வரலாற்றில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒரே நிதியாண்டில் டெண்டர் விடப்படுவது இதுவே முதல்முறையாகும். 5 கோடி மதிப்பில் பெரம்பூரில் உள்ள பெரியார் நகர் பேருந்து நிலைய மேம்பாடு, முடிச்சூரில் உள்ள வெளிவட்ட சாலையில் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக 5 ஏக்கர் நிலத்தை ₹29 கோடி மதிப்பில் கையகப்படுத்துதல் உள்பட பல்வேறு திட்டங்களுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள், அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களுக்கும் டெண்டர் விடப்படும் என்றார்.
சிஎம்டிஏ வெளியிட்ட தரவுகளின் படி, சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு வெளியிட்ட 16 பொது அறிவிப்புகளில், கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (கேசிபிடி), கேசிபிடியில் பூங்கா மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் லேஅவுட்களுக்கு ஆன்லைன் அனுமதி வழங்குவது உட்பட ஐந்து திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மாதவரம் டிரக் முனையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சிக்கு (ஜிசிசி) ₹30.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஐந்து பணிகள் நடந்து வருகின்றன.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கூடுதல் தளம் மற்றும் கழிப்பறைகளுடன் விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் மறுபரிசீலனையில் இருப்பதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
அதேநேம் சென்னை பெருநகரப் பகுதிக்குள் (CMA) உள்ள பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கான மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகளை (TDR) வழங்குவதற்கான முன்மொழிவுகளை நவம்பர் 11, 2023 அன்று தமிழக அரசிடம் சிஎம்டிஏ சமர்ப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவிற்காக சிஎம்டிஏ காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர மொத்தம் 34 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன, அதில் 31 க்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டது. இதில், 30 க்கு டெண்டர் கோரப்பட்டது மற்றும் 27 க்கு ஏலம் முடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications