மதுரையில் நடக்கப்போவது முருகன் மாநாடு அல்ல.. சங்கிகள் மாநாடு.. அட்டாக் மோடில் சேகர்பாபு!
சென்னை: மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடத்தப்படுவது முருகன் மாநாடு அல்ல, அது சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பாக நடத்தப்படும் மாநாட்டுக்காக திட்டமிட்டு வசூல் வேட்டை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், மக்களை பிளவுப்படுத்துவதற்காக முருகன் மாநாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்க முயன்றனர். அதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி தரப்பில் மதுரையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் மதுரையில் 144 தடை விதிக்கும் சூழல் ஏற்பட்டது.

மதுரையில் முருகன் மாநாடு
தற்போது மதுரையில் ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தி மதுரையில் "குன்றம் காக்க.. கோயிலை காக்க" என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான பூமி பூஜை பணிகள் ஏற்கனவே நடைபெற்றது.
இந்து முன்னணி அழைப்பிதழ்
இதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜிகே வாசன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோருக்கு நேரடியாக இந்து முன்னணி சார்பாக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கிகள் மாநாடு
இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மதுரையில் நடப்பது முருகன் மாநாடு அல்ல.. முழுக்க முழுக்க சங்கிகள் நடத்தும் மாநாடு. அது அரசியல் மாநாடு.. அதற்கும் கோயில்கள் சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளது.
சேகர்பாபு விமர்சனம்
அரசு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பங்கேற்றார்கள். 2 நாள் நிகழ்ச்சியாக திட்டமிட்டோம். அப்போது திட்டமிட்டு எந்த கூட்டத்தையும் கூட்டவில்லை. இப்போது திட்டமிட்டு யாரிடமும் வசூல் வேட்டையை நடத்தவில்லை. வாகனங்களை ஏற்பாடு செய்யவில்லை. அரசு நடத்திய மாநாட்டில் ஒருநாளிற்கு குறைந்தது 7 முதல் 8 லட்சம் மக்கள் வந்தார்கள்.
மக்களை பிளவுப்படுத்தும் மாநாடு
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அந்த மாநாடு 7 நாட்களாக மாற்றப்பட்டது. அதனால் அரசு நடத்திய முருகன் மாநாட்டையும், இந்து முன்னணி நடத்தும் மாநாட்டையும் ஒப்பிடாதீர்கள். இது அரசியல் தேவைகளுக்காக மதத்தால் இனத்தால் மக்களை எப்படி பிளவுப்படுத்த முடியுமோ, அந்த பிளவிற்கான ஆயுதமாக இந்த மாநாட்டை பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications