தேர்தல் தோல்விக்கு பரிகாரம் தேட சவுக்கடியா? அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!
சென்னை: திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்றும், நாளை காலை 10 மணிக்கு என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலையின் அறிவிப்பை விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும்போது அவர் கீழே விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டம். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. எஃப்.ஐ.ஆர் எப்படி வெளியே கசிந்தது? காவல்துறையினரை தவிர அந்த எஃப்.ஐ.ஆரை யார் வெளியே விட முடியும்? ஏதோ அந்த பெண் குற்றம் செய்த மாதிரி எஃப்.ஐ.ஆர் எழுதியிருக்கிறார்கள். அந்த பெண்ணின் பெயர், செல்போன் எண், தந்தை பெயர், ஊர் பெயர் இதெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் போலீஸ் வெட்கப்பட வேண்டும்.
அந்த குடும்பத்தையே நாசம் பண்ணிடீங்க. இந்த கட்சி பொறுப்பில் இருப்பதனால் நான் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன். வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி ஆகிடும். திமுகவில் பொறுப்பில் இருந்ததால் அவனை போலீசார் செக் பண்ணவில்லை. அப்படி செக் பண்ணாததால் அவன் தைரியமாக வெளியே வந்திருக்கிறான். அந்த எஃப் .ஐ.ஆரை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. இந்த அரசியல் வேலைக்கு ஆகாது.
இனிமேல் இந்த ஆர்ப்பாட்டம் வேலை எல்லாம் இல்லை. வேறு மாதிரி தான் உங்களை டீல் செய்ய போகிறோம். நாளையில் இருந்து பாஜகவினர் ஒவ்வொருவரும் வீட்டின் முன்பு 10 மணியளவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். நாளை 10 மணியளவில் நான் என்னை 6 முறை சாட்டை அடித்துக்கொள்ள கூடிய நிகழ்வை என்னுடைய வீட்டிற்கு வெளியே நிகழ்த்தப் போகிறேன். நாளையில் இருந்து திமுக என்கிற கட்சி தமிழகத்தில் அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன்.
நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி 2வது வாரம் இந்த விரதம் முடியும். அறுபடை வீடுகளுக்கும் சென்று முருகப்பெருமானிடம் முறையிடப் போகிறேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில், எதற்கு உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்?” என காட்டமாகப் பேசினார் அண்ணாமலை.
திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன். நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது, தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. அண்ணாமலையின் பேச்சுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக ஜெயிப்போம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என கூறி இருந்தார். தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பிராயச்சத்தமாக, அண்ணாலை சாட்டையால் அடித்துக் கொள்ளப்போகிறாரா எனத் தெரியவில்லை. இருக்கிறார்.
சட்டத்தின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில், புகார் வந்தவுடன் 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தில் சாமியார் கூட்டிய கூட்டத்தில் 200 பேர் பலியாகினர். இதுவரை அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவிலை்லை. டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? மணிப்பூரில் வன்முறை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொள்ளாச்சியில், “அண்ணா என்னை விட்டுடுங்க” என்ற அபயக்குரல் கேட்டபோதும் பாலியல் தொந்தரவு நடந்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தாமதமாக தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் அரசு துரிதமாக செயல்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டு, விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அதேசமயம், அரசு விரைந்து செயலாற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications