குட்நியூஸ்.. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்நிலையில் தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2019 டிசம்பர் 1ம் தேதி முதல் கணக்கீட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.
ஊதிய உயர்வு என்பது 6 சதவீதமாகும். இந்த ஊதிய நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, 1.12.2019ம் நாளன்று 10 ஆண்டு பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இது நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527 கோடி கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வின் மூலம் ஏற்படும் நிலுவைத்தொகை, 2019ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 31.3.2022 வரை, மாதம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. இதனால் கூடுதலாக ரூ.623 கோடி வாரியத்திற்கு செலவுகள் ஏற்படும்.
இந்த ஊதிய உயர்வு மூலம் மொத்தம் 75,978 பேர் பயனடைய உள்ளனர். மேலும் 10 ஆண்டு பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிப்பலனாக 3 சதவீதம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை, 62,548. இதுதொடர்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications