அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்! புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்படுகிறார்
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரித்து வருவதால் ஜாமீன் குறித்த மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்கும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்படுவது இது 7வது முறையாகும்.

ஏற்கெனவே அவர் கைது செய்யப்பட்டபோது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனவே சிறையில் இவரது உடல் நலனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அமலாக்கத்துறையினர் விசாரணையின்போதும் சில நேரங்களில் உடல் நலனில் பிரச்னை ஏற்படும். எனவே அமலாக்கத்துறையினரும் முடிந்த அளவுக்கு உடல் நலத்துடன் இருக்கும் நாட்களில் விசாரணையை மேற்கொண்டனர்.
இப்படி இருக்கையில் இன்று காலை திடீரென செந்தில் பாலாஜிக்கு ரத்தக்கொதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பாரா? அல்லது சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவரா? என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் செந்தில் பாலாஜி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் சிறைக்கு அழைத்து செல்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. இது தொடர்பான வழக்கில்தான் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தி அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .












Click it and Unblock the Notifications