கடந்த ஆண்டை விட அரசு பஸ்களில் கூடுதல் முன்பதிவு! எவ்வளவு தெரியுமா? ஆய்வுக்கு பின் விளக்கிய அமைச்சர்
சென்னை: நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் அலைமோதி வருகிறார்கள். இதில் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு பேருந்து கிடைப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேரடி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல அதற்கு மறுநாள், திங்கட்கிழமை அரசு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டிருக்கின்றனர். தீபாவளி முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி முடிந்துவிட்ட நிலையில், சாமானிய மக்கள், முன்பதிவு இல்லா பேருந்தை நம்பியே வந்திருக்கின்றனர்.
ஆனால் கோயம்பேட்டில் முன்பதிவு இல்லா பேருந்துகள் போதுமான அளவில் இல்லை என்று புகார்கள் எழுந்தன. இதனையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று நேரடி ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது,
"நான் பெரம்பலூரில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்திவிட்டு, சென்னைக்கு வந்திருக்கிறேன். மறைமலை நகர் வரையில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால் அதற்கு பிறகு நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய பேருந்துகள் தாமதமாக வந்துக்கொண்டிருக்கின்றன. எனவே நிச்சயமாக அனைவருக்கும் பேருந்து கிடைக்கும். தற்போது முதல்கட்டமாக முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் வரிசையாக இயக்கப்படும்.
பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது எனில், சிலர் முன்பதிவு செய்துவிட்டு பேருந்துக்காக காத்திருக்கிறார்கள். பலர் முன்பதிவு இல்லாமல் காத்திருக்கிறார்கள். எனவே அறிவிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை தாண்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும், தமிழ்நாட்டில் அது உயர்த்தப்படவில்லை. எனவே அரசு பேருந்துகளில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்களின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் நாம் தற்போது இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications