டெல்டாவில் நிலக்கரி! தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது! சட்டசபையில் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் மத்திய அரசின் நிலக்கரி திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி எடுப்பது குறித்த மத்திய அரசின் ஏல அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டத்தின் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் நிலக்கரி எடுக்கும் ஏலம் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு எந்த ஒப்புதலும் பெறவில்லை என்றார்.
மேலும், மத்திய அரசின் தன்னிச்சையான நடவடிக்கை தமிழகத்திற்கு கெடுவாய்ப்பாக அமைந்திருக்கிறது என வேதனைத் தெரிவித்த அவர் முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்தில் இடம்பெற்றிருந்த சாரம்சம் குறித்து விளக்கினார் தங்கம் தென்னரசு.
நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் மத்திய அரசு கலந்து ஆலோசித்திருந்தால் தேவையற்ற இத்தகைய குழப்பங்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு ஆகிய மூன்று பிளாக்குகளையும் ஏலம் விடப்படும் பட்டியலில் இருந்து நீக்குமாறு முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி இது குறித்து விளக்கம் அளித்துள்ளதாக கூறினார்.
இதே போல் நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். ஆகவே டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு மிகத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சட்டசபையில் பாஜக பாடம் நடத்துவதெல்லாம் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக வானதி சீனிவாசனுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எந்த சூழ்நிலையிலும் டெல்டாவில் நிலக்கரி எடுக்க அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்கமாட்டோம், அனுமதிக்கமாட்டோம் என மூன்று முறை கூறி அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications