“இந்திக்கு பட்டுகம்பளம் விரித்த அதிமுக” விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு! நீடிக்கும் வார்த்தை போர்
சென்னை : இந்திக்கு பட்டுக்கம்பளம் விரித்ததை மறைக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாகக் கூறியுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தி மொழி விவகாரத்தில் அதிமுக போட்ட இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி விட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துக்களை மொழிபெயர்த்து இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்," ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டைவேடம் போடுகிறது திமுக என கடுமையாக விமர்சித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் கேள்வி
இதற்கு பதிலளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு." சொத்தை வாதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, அதன் பேரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் குளிர் காய முற்பட்டு இருக்கின்றார்." என அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில், " "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

தங்கம் தென்னரசு அறிக்கை
இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கும் பதிலளிக்கும் வகையில் இந்திக்கு பட்டுக்கம்பளம் விரித்ததை மறைக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாகக் கூறியுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தி மொழி விவகாரத்தில் அதிமுக போட்ட இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி விட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிப் பிரச்சனையில் வழக்கம் போல அதிமுக மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும், ஓ.பன்னீர் செல்வம் திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்திக்கு அதிமுக பட்டுக்கம்பளம்
இந்தி மொழிக்கு அதிமுக பட்டுக் கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சித்திருக்கின்றார். திருக்கோவில்களைத் திமுக அரசு இடிக்கின்றது என்ற பச்சைப் பொய்யை பரப்ப முற்பட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பது விரக்தியின் வெளிப்பாடாகும். மதுரையில் தமிழன்னைக்கு 100 கோடி ரூபாயில் சிலை வைப்போம் எனக் கூறிவிட்டு ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்காமல் திட்டத்தை கைவிட்டது அதிமுக அரசு.

வேடிக்கையான நிகழ்வு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட அதிமுக அரசில் தான் ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியுமா செம்மொழி என்ற சொல்லைக்கூட பத்தாண்டு கால தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளில் இடம் பெறாது பார்த்துக்கொண்ட அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான சாதனைகள் என பட்டியல் போட முனைந்திருப்பதுதான் வேடிக்கையானது; வேதனையானதும் கூட" என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications