தமிழ்நாட்டில் சாத்தியமான புரட்சி! மின் வாகன உற்பத்தியில் சாதனை.. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை: மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மின் வாகன உற்பத்தி தலைநகராக மாறியுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மாசு ஆண்டுக்கு 33.70 லட்சம் உயிர்களை பறித்துள்ளது. இதில் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை மட்டுமே 3.85 லட்சம் பேரின் உயிரை பறித்திருக்கிறது. உலக அளவில் இப்படி எனில் இந்தியாவை பொறுத்த அளவில் ஆண்டுக்கு 74,000 பேர் காற்று மாசு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் இந்த 74,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகளில் 3ல் 2 பங்கு இறப்புக்கு (66%) டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதுவே சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் போக்குவரத்து மாசு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 47% உயிரிழப்புகளுக்கு டீசல் வாகனங்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் இறப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் 14% மற்றும் அமெரிக்காவில் 16% குறைந்துள்ளது, ஆனால் சீனா மற்றும் இந்தியாவில் 26% அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் டீசல் வாகனங்களின் பயன்பாடுதான்.
இப்படி இருக்கையில் உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியாவிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின் வாகன உற்பத்தியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுபோன்ற வாகன உற்பத்தியை அதிக அளவில் மேற்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரு சக்கர மின்சார வாகனங்களில் 70%க்கும் மேலும், 4 சக்கர வாகனங்களில் 40% க்கும் மேலும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் தமிழ்நாடு மின்வாகன தலைநகராக மாறியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை கொண்டு வருபவர்கள் கூட, தமிழ்நாட்டில் உள்ள பெண் பணியாளர்களின் விகிதத்தை கண்டு வியந்துபோயுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிட்சுபிஷி, பெகட்ரான், ஓலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.2.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளன.
இந்த முதலீடுகள்தான் அதிக அளவில் வாகன உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றன. அதேபோல இந்த காலகட்டத்தில் வேகமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வேகமாக உற்பத்தியை தொடங்குவது மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதையும் மாநில தொழில்துறை உறுதி செய்துள்ளது. விரைவில் தமிழ்நாடு உலகளாவிய மின் வாகன உற்பத்தியின் மையமாக மாறும்.
தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்து வரும் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி சர்வதேச மின் வாகன முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். இது அறிவுசார்ந்த கொண்டாட்டமாக இருக்கும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications