நள்ளிரவு ஆய்வு.. விடிந்ததும் கிஃப்ட்ஸ்.. ஆடிப்போன ஆதிதிராவிட மாணவர்கள்.. உதயநிதி கெத்து!
சென்னை: தரமான சம்பவத்தால் ஆதிதிராவிட மாணவர்கள் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப் பயணத்தின்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடித்து, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், அங்குக் கலைஞர் உரிமைத்திட்டப் பயனாளிகளுக்கு அதற்கான வங்கி அட்டைகளை வழங்கினார்.
அதற்கான விழாவில் கலந்துகொண்டது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "சேலம் மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 மகளிருக்குக் கலைஞர் உரிமைத் திட்டத்திற்கான டெபிட் கார்டுகளை இன்று வழங்கி வாழ்த்தினோம். வரலாறு நெடுகிலும் கலாச்சாரம் - சட்டம் - பொருளாதாரம் ஆகிய தளங்களில் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் நீக்கிய திராவிட இயக்க வழியில் மகளிர் மேன்மைக்கு அயராது உழைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்போன்று மற்றொரு ட்விட்டர் பதிவில், "அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்கள்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவை, உரிய முறையில் அவர்களுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்திடச் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்தோம்.
RTO அலுவலகத்திலிருந்த வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் தொடர்பான கோப்புகளை ஆய்வுசெய்த பிறகு வாகனப்பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்க வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தோம்.

தொடர்ந்து, அங்கிருந்த கழிவறையை ஆய்வுசெய்து அதனைச் சுத்தமான முறையில் வைத்திருக்க அறிவுறுத்தியதோடு, அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதை எல்லாம் கடந்து தனது சேலம் பயணத்தில் தரமான சம்பவம் ஒன்றை அமைச்சர் உதயநிதி செய்து ஆதிதிராவிடர் மாணவர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார். அது என்ன தரமான சம்பவம் என்கிறீர்களா?

சேலம் அரசு கலைக்கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதிக்கு திடீரென்று விசிட் அடித்தார் உதயநிதி. அவர் விடுதிக்குச் சென்றபோது மாணவர்கள் அனைவரும் விடுதியின் கதவுகளை அடைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களைக் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே சென்ற அமைச்சர், 'மாணவர்களிடம் அந்த இரவில் 'இன்று இரவு என்ன சாப்பிட்டீர்கள்? மாலை என்ன உணவு கொடுத்தார்கள்? காலையில் வழங்கப்பட்ட உணவு வகை என்ன?' என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார். அவர்கள் சொல்லும் பதில், அரசு வழங்கி உள்ள மெனு படி சரியாக உள்ளதா? எனச் சோதித்தார்.

அதன் பின்னர் உங்களின் குறை என்ன என்று கேட்ட உடன் அங்குள்ள மாணவர்களுக்கு உதயநிதியே நேரில் வந்துள்ளார் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டு தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வந்தனர்.
பலர் தங்களுக்கு விளையாடுவதற்குத் தேவையாக உபகரணங்களே இல்லை என்று சொன்னார்கள். அதைக் கேட்ட விளையாட்டு அமைச்சர், தனது துறை சார்ந்த கோரிக்கையாயிற்றே தாமதிக்கவே கூடாது என்று உடனே நிறைவேற்றித் தருகிறேன் என்று நள்ளிரவில் வாக்குறுதி அளித்துவிட்டு வந்தார்.

விடிந்ததும் காலையில் விடுதி முன் அவர்கள் கேட்ட அனைத்து உபகரணங்களும் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அதைப் பார்த்த மாணவர்கள் ஆடிப் போனார்கள். அவ்வளவு ஆச்சரியம். உண்மைதானா என்ற பெருமிதம் வேறு.
இந்த நள்ளிரவு விசிட் பற்றி என்ன நினைக்கிறார்கள் மாணவர்கள்?
"என் பேயர் எஸ்.குமரேசன். அம்பேத்கர் விடுதியில்தான் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். இரவு பத்தரை மணிக்கு திடீரென்று அமைச்சர் உதய் அண்ணா எங்கள் விடுதிக்கு ஆய்வு நடத்த வந்தார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை" என்கிறார்

மாணவர் ஆர்.விஜயகுமார், "நான் படத்தில்தான் உதய் அண்ணாவைப் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அவர் மிகச் சாதாரணமாகப் பேசினார்.
சாப்பாடு எப்படி உள்ளது என்றார். நல்லா சமைத்துத் தருகிறார்களா? என்றும் கேட்டார். என்ன வசதிகள் வேண்டும் என்று கேட்டார். நாங்கள் எங்களுக்கு விளையாட்டு உபகரணங்களே இல்லை என்றோம். உடனே ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.

இரவு அவர் சொன்னார். விடிந்ததும் காலையில் அனைத்து உபகரணங்களும் விடுதிக்கு வந்துவிட்டது. எல்லாம் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. இதை எல்லாம் செய்து கொடுத்த உதய் அண்ணாவுக்கு மிக்க நன்றி" என்கிறார்.
யுவராஜா, நான் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அம்பேத்கர் விடுதியில்தான் தங்கி இருக்கிறேன். நைட் உதய் அண்ணா வந்தார். எங்கள் குறைகளைக் கேட்டார். பொறுமையாகச் சொன்னோம். அவர் உடனே எல்லா கோரிக்கையும் நிறைவேற்றித் தந்துவிட்டார்" என்கிறார்

காப்பாளர் செல்வராஜ், "நான் விடுதிக்கு உள்ளாகத்தான் இரவு இருந்தேன். இரவு திடீர் என்று பசங்கள் எல்லாம் சத்தம் போட்டார்கள். என்ன என்று வெளியே வந்து பார்த்தால், அமைச்சர் உதயநிதி வந்திருந்தார்.
எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. திடீர் விசிட் செய்ததால், வழக்கம் போல் பூட்டி விட்டு நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். பூட்டி இருந்ததால் வெளியே இருந்தே அவர் மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்புறம் போய் கதவை நாங்கள் திறந்துவிட்டோம்.
உள்ளே போனதும் ஸ்டாக் லிஸ்ட் கேட்டார். அப்புறம் சமையல் கட்டுக்குப் போகலாம் என்றார். அங்கே போய் வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்களை எல்லாம் ஆய்வு செய்தார்.

அப்புறம் மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் கேட்டார்கள். காலை பேட், பந்து, ஸ்டெம்ப், ஃபுட் பால், வாலி பால், டென்னிஸ் பேட், கேரம் போர்டு என அனைத்தையும் வாங்கி தந்துள்ளார். அவ்வளவு மின்னல் வேகத்தில் நடந்துள்ளது" என்கிறார்.
இந்த திடீர் விசிட் குறித்து அமைச்சர் உதயநிதி, "சேலம் அரசு கலை - அறிவியல் கல்லூரி ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வின்போது, விடுதியில் உள்ள மாணவர்கள் தங்கும் அறை, படிக்கும் அறை, உணவுப் பொருட்கள் அறை, சமையற்கூடம், கழிவறை என ஒவ்வொரு அறையாகச் சென்று ஆய்வு செய்தோம். விடுதியில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய அவற்றையும் ஆய்வு செய்தோம்.
மாணவர்களுக்குத் தரமான கல்வி வகுப்பறையில் கிடைப்பது போல - தரமான வாழ்விடம் விடுதியில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகள் - அலுவலர்களை வலியுறுத்தினோம்.
ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள விடுதி மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் வேண்டுமென நம்மிடம் கோரிக்கை வைத்தனர். அதையேற்று, Cricket Bat- Carrom board - Tennis Bat - Football - Volleyball உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை இன்று வழங்கினோம். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க அம்மாணவர்களை வாழ்த்தினோம்" என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதவர் நம் விளையாட்டுத் துறை அமைச்சர்.












Click it and Unblock the Notifications