அந்த 2 திட்டம் சென்னைக்கே முக்கியம்.. ஓஎம்ஆர் சாலை முழுக்க ரவுண்டு வந்த உதயநிதி ஸ்டாலின்..அதிரடி
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார். அதில் இரண்டு சாலை போக்குவரத்து திட்டங்கள் சென்னைக்கு மிக முக்கியமான திட்டங்கள் ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வளர்ச்சி பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக நேற்று காலையில், ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலை குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவில், "சென்னை ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை, துரைப்பாக்கம் முதல் நீலாங்கரை வரை இணைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணியையும் - அந்த சாலையில், பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே கட்டப்படவுள்ள பாலத்துக்கான இடத்தையும் இன்று (நேற்று) ஆய்வு செய்தோம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை மற்றும் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் - அலுவலர்களை அறிவுறுத்தினோம்." என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது போல், ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலை திட்டம் தென் சென்னை பகுதிக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.பல்லாவரம் ரேடியல் சாலையில் இருந்து நேரடியாக ஈசிஆரை இணைக்கும் இந்த சாலை முடிந்ததால் தான் சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும். அதேநேரம் திருவான்மியூரையோ அல்லது சோழிங்கநல்லூர் சாலையில் நீண்ட தூரம் பயணித்து பனையூரையோ சென்று அடைய வேண்டியதில்லை. மிகவும் அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ஓஎம்ஆர் சாலை மெட்ரோ ரயில் பணிகளால் முடங்கி உள்ளது. இந்த சூழலில் ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலை பணி விரைவில் முடிந்தால் சென்னைக்கு பெரிய பாரம் குறையும்.
ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலை பணிகளை ஆய்வு செய்தபின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை சோழிங்கநல்லூர் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ELCOT சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயரடுக்கு கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். பெரும்பாலானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அந்த கட்டடத்தில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய வேலைகள் - ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் -அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டட வரைபடம் மற்றும் மாதிரி படத்தைக் காட்டி புதிய கட்டடத்தின் அமைப்பினை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
இதையடுத்து கேளம்பாக்கம் சென்ற உதயநிதி ஸ்டாலின்அங்கு மாநில நெடுஞசாலை புறவழிச்சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நம் திராவிட மாடல் அரசு அமைந்தது முதல், மாநிலத்தின் உள்கட்டமைப்பை பெருக்கி அதன் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் புறவழிச்சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை, துறைசார்ந்த அதிகாரிகள் - அலுவலர்களுடன் இன்று ஆய்வு செய்தோம். கேளம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழலை ஏற்படுத்திடும் வகையில், இத்திட்டப்பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தினோம்." என்று கூறினார். கேளம்பாக்கம் புறவழிச்ச்சாலை பணிகள் விரைந்து முடிந்தால் அதனைசுற்றியுள்ள மக்கள் எளிதாக சென்னைக்கு வெளியில் சென்றுவிட முடியும்.எனவே இந்த திட்டமும் சென்னைக்கு மிக முக்கியமானதாகும்.
கேளம்பாக்கத்தில் ஆய்வு செய்த பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுபற்றி உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில்,செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டோம். புறநோயாளிகள் பதிவு செய்யுமிடம் - மருந்து - மாத்திரைகள் வழங்குமிடம் - சிகிச்சைக்கான வார்டுகள் - கழிப்பறைகளுக்கு சென்று, அவற்றின் நிலையை ஆய்வு செய்தோம்.
மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் அங்குள்ள வசதிகள் - சிகிச்சையின் தரம் பற்றி கேட்டறிந்தோம். சிறு நகரங்களிலும் வலுவான சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்திடும் வகையில், செயலாற்றிட வேண்டுமென திருப்போரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் - செவிலியர்கள் - சுகாதாரப் பணியாளர்களை அறிவுறுத்தினோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications