அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்.. தமிழகத்தில் நடிகராக இருந்து யாரெல்லாம் அமைச்சரானார்கள்? நீளும் பட்டியல்
சென்னை: நடிகராக இருந்து அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்று கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் நடிகராக இருந்து அமைச்சராக பதவியேற்றவர்களின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் முதலாக இடம்பிடித்தவர் முதல் தற்போது பதவியேற்ற உதயநிதி வரையிலான முழுவிபரம் வருமாறு:
தமிழக அரசியலுக்கும், திரையுலகிற்கும் மிகமிக நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர்கள்.
இவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களாக உருமாறி முதலமைச்சராக பதவியேற்றனர்.

தமிழக அரசியலில் நடிகர்கள்
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் அரசியலில் நுழைந்த சிவாஜி ஜொலிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை துவக்கி எம்எல்ஏவானார். விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கி எம்எல்ஏவானார். இவர் கடந்த 2011ல் எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். அதன்பிறகு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எம்எல்ஏவான நடிகர்-நடிகைகள்
இதுதவிர திமுக, அதிமுக, பாஜகவில் கட்சிகளில் நடிகர், நடிகைகள் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். திரையுலகத்தை சேர்ந்த பலரும் எம்எல்ஏ, எம்பிக்களாக இருந்துள்ளனர். சட்டசபைக்கு முதல் முதலாக நுழைந்த நடிகை என்றால் அது கேபி சுந்தராம்பாள் (எம்எல்சி), நடிகர் என்றால் அது எஸ்எஸ்ஆர். இவர் 1962ல் தேனியில் இருந்து திமுக சார்பில்எம்எல்ஏவானார். அதன்பிறகு நெப்போலியன், ராதாரவி, சரத்குமார், விஜயகாந்த் வரிசையில் உதயநிதி ஆகியோர் எம்எல்ஏவாக ஜொலித்துள்ளனர். நெப்போலியன் எம்பியாக செயல்பட்டுள்ளார்.

உதயநிதி பொறுப்பு
இந்நிலையில் தான் தற்போது உதயநிதி இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நடிகராக இருந்த ஒருவர் தமிழ்நாட்டில் அமைச்சராவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நடிகராக இருந்து அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் லிஸ்ட் வருமாறு:

நடிகராக முதல் அமைச்சர்
தமிழகத்தில் முதல் முதலாக நடிகராக இருந்து அமைச்சராக பொறுப்பேற்ற நபர் ஐசரி வேலன் ஆவார். காமெடி நடிகரான இவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நண்பர். இவர் கடந்த 1977ல் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.

மத்திய அமைச்சரான நெப்போலியன்
அதன்பிறகு திருச்சி சவுந்தரராஜன் நடிகராக இருந்து அமைச்சரானார். 1980ல் எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக நெப்போலியன் பொறுப்பேற்றார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தார்.

விளையாட்டு துறை அமைச்சர்
அந்த வகையில் தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திரையுலகில் நடிகராக இருந்த இவர் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி தற்போது அமைச்சராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications