இதுவரை இப்படி நடந்ததே இல்லை! கேலோ இந்தியாவில் சாதித்த தமிழ்நாடு! உதயநிதி சொன்ன முக்கிய தகவல்.. செம
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து வந்த ‛கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளன. இந்த போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு பக்க பட்டியலில் டாப் 3ல் இடம் பிடித்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் கூறியுள்ள நிலையில் தமிழ்நாடு விளையாட்டு தலைநகராக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

இந்தியாவின் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைத்தார். தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என 4 இடங்களில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
இந்நிலையில் தான் இன்றுடன் கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து சென்னையில் நிறைவு விழா நடந்தது. இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்து தகுதியும் உள்ளது. இதற்காக விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. கேலோ இந்தியா போட்டியின் பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறைதான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கிராமபுற ஏழை, எளிய மாணவர்களை கண்டறிய வாய்ப்பாக அமைந்தது. சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறும். விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமின்றி அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
மேலும் மணிப்பூரை சேர்ந்த வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி என்பது வழங்கப்பட்டது. அதில் 2 பேர் பதக்கம் வென்றுள்ளனர்'' என்றார். இந்த கேலோ இந்தியா போட்டியில் பதக்கப்பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்து அசத்தியது. தமிழ்நாடு அணி சார்பில் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications