மிஸ் ஆன சான்ஸ்! நயன்தாரா கல்யாணம் என்னால் நடந்தது?: ஷாக் கொடுத்த மிர்ச்சி சிவா
சென்னை: தனக்கு வந்த பட வாய்ப்பை தவறவிட்டதால்தான் நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமே நடந்தது நடிகர் மிர்சி சிவா தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட்டை செட் பண்ண திரைப்படம் சூது கவ்வும். அந்தப் படம் பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக விஜய் சேதுபதிக்கும் இயக்குநர் நலன் குமாரசாமிக்கும் மாபெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

முதல் பாகம் ப்ளாக் ஹியூமர் என்ற பாணியைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க கலகலப்பு மிக்க கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், இதில் மிர்சி சிவா நடித்துள்ளார். கூடவே காமெடி நடிகர் கருணாகரன் நடித்துள்ளார்.
இந்தப் படம் பற்றிப் பேசிய சிவா தனது வாழ்க்கையில் வந்த மிகச் சிறப்பான வாய்ப்பு ஒன்றைத் தவறவிட்டது பற்றிப் பேசியுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே காதல் உருவாகத் தான் ஒரு காரணமாக இருந்ததாகக் கூறி ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சிவா அளித்துள்ள பேட்டியில், "முதலில் நாங்கள் கூட 'சூது கவ்வும்' ஒரு நல்ல படம். அதற்குப் போய் பார்ட் 2 எடுத்து பெயரைக் கொடுக்க வேண்டாமே என்றுதான் யோசித்தோம். சரியாகச் சொன்னால், இது அப்படியே பார்ட் 2 போல் இருக்காது. முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது போல சுவாரஸ்யமாக இருக்கும். எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. நடிக்கலாம் என முடிவு செய்தேன்" என்றவர் தன் வாழ்வில் தவறவிட்ட வாய்ப்பு பற்றிய ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"வாழ்க்கையில் தவறவிட்டது என்று ஒன்றும் இல்லை. ஆனால், 'நானும் ரவுடிதான்' படத்தில் நான் தான் நடிக்கவேண்டி இருந்து. விக்னேஷ் சிவன் முதலில் என்னை வைத்து இயக்குவதாகவே அது இருந்தது. அந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, எனக்குச் சரியாக இருக்காது என நினைத்தேன். அந்தக் கதை நன்றாக இருந்தது. அதற்கு நான் பொருந்தமாட்டேன் என நினைத்து மறுத்தேன்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அதில் நான் நடித்திருந்தால், நயன்தாரா நடித்திருக்கமாட்டார். வேறு யாராவது ஹீரோயின் ரோல் பண்ணி இருப்பார். நயன் நடிக்காமலிருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் இயக்கி இருப்பார். அவர் நயன்தாராவைப் பார்க்காமலே போய் இருக்கலாம். நான் நடிக்காததால், அதில் நயன் நடித்தார். அதன் மூலம் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் இடையே ஒரு காதல் மலர்ந்தது. சொல்லப் போனால் என்னால் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி இடையே திருமணம் நடந்துள்ளது. அதற்காக விக்னேஷ் சிவன் எனக்கு நன்றி சொல்லவேண்டும்.
இந்த வாய்ப்பை தவறவிட்டதற்காக நான் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். அதற்காகக் கவலை அடைவதில் பயன் இல்லை. நான் ஒரு பிஎம்டபுள்யூ கார் வாங்கினேன். அந்த மாடல் காரை யுவன் ஷங்கர்ராஜாதான் வாங்கச் சொன்னார். அந்த கார் கடந்த மழையின் போது வெள்ளத்தில் மூழ்கி பழுதாகிவிட்டது. அதற்காக நான் கவலைப்பட முடியுமா?
யாரேனும் திருடிப் போய் இருந்தால்கூட வருந்தலாம். மழைவெள்ளத்தில் மூழ்கியது. யார் என்ன செய்ய முடியும்? இந்த இயற்கைதான் எனக்கு அந்த காரை கொடுத்தது. அதை இயற்கையே எடுத்துப் போகும் போது ஒரு நஷ்டமும் இல்லை. " என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications