சென்னை வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் மாயம்.. 2 நாட்களாக தேடியும் கிடைக்காததால் பரபரப்பு!
சென்னை: வண்டலூர் பூங்காவில் சபாரி பகுதிக்குத் திறந்து விடப்பட்ட ஆண் சிங்கம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சபாரி சேவை நேற்று மூடப்பட்ட நிலையில், சிங்கத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் பாதுகாப்பு வேலியில் எந்தவொரு சேதமும் இல்லை என்பதால் சிங்கத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. 1500 ஏக்கர் பரப்பளவில் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய பூங்காக்களில் ஒன்றாக இது இருக்கிறது. வண்டலூர் பூங்காவில் 2000க்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பல்வேறு வகையான விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வண்டலூர் பூங்கா
மேலும், சென்னையில் மிகவும் முக்கியமான ஒரு சுற்றுலா தளமாகவும் வண்டலூர் பூங்கா இருக்கிறது. தினசரி 2500க்கும் மேற்பட்டோர் வண்டலூர் பூங்கா வந்து செல்கிறார்கள். வீக் எண்ட் அல்லது பொது விடுமுறை நாட்களில் இது 10 ஆயிரமாகக் கூட அதிகரிக்கிறது. இதனால் எப்போதும் பிஸியாகவே வண்டலூர் பூங்கா இருந்து வருகிறது.
வண்டலூரில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது சபாரி வசதி. அதாவது பொதுவாக உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் கூண்டுக்குள் இருக்கும். நாம் அதைப் பார்த்து வருவோம். ஆனால், சபாரியில் விலங்குகள் காடுகளில் உலாவும். நாம் பாதுகாப்பான ஜீப் அல்லது வேன்களில் இருந்து அதைப் பார்ப்போம். இதில் சிங்கத்தை மிக அருகில் பார்க்க முடிவதால் லயன் சபாரிக்கு பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.
புதிய சிங்கம்
லயன் சபாரியில் மொத்தம் 6 ஆறு சிங்கங்கள் உள்ளன.. அதில் சுழற்சி முறையில் இரண்டு சிங்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இரு சிங்கங்கள் சபாரி பகுதிக்குள் இருக்கும்போது, மற்ற சிங்கங்கள் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும். அதன்படி நேற்று முன்தினம் வண்டலூர் பூங்காவுக்கு புதிதாக வந்த ஆண் சிங்கம் ஒன்று லயன் சபாரிக்காக காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது.
திடீரென மாயம்
இதுபோல காட்டுப் பகுதியில் விடப்படும் சிங்கம் மாலை நேரங்களில் கூண்டுக்குள் வந்துவிடும். இருப்பினும், இந்த புதிய சிங்கம் இரவுக்குப் பிறகும் கூண்டிற்குத் திரும்பவில்லையாம்.. நேற்று காலை வரை சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் சுற்றியுள்ள இரும்பு வேலி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இருப்பினும், இரும்பு வேலியில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. எல்லாம் சரியாகவே இருந்துள்ளது. அதாவது சிங்கம் வெளியே எங்கும் தப்பித்துச் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சிக்கல் இல்லை
வேலி பாதுகாப்பாக இருப்பதால் அதைத் தாண்டி சிங்கம் வெளியே செல்லாது என்கிறார்கள் வண்டலூர் பூங்கா ஊழியர்கள்.. மேலும், காட்டுப்பகுதியில் சிங்கம் திறந்து விடப்படும்போது அவை அங்கேயே மறைந்து கொள்ள முயல்வது சாதாரணம் தான் என்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பெண் சிங்கம் இதுபோலத் தான் மறைந்து கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், 2 நாட்களில் அது தானாகவே திரும்பி வந்துவிட்டதாகவும் கூறினர். அதேபோல இந்தச் சிங்கமும் திரும்ப வந்துவிடும் என்றும் பாதுகாப்பான இடத்திலேயே சிங்கம் இருப்பதால் மக்களுக்குப் பாதிப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம் தானாகத் திரும்ப வந்துவிடும் என்ற போதிலும், அதைச் சீக்கிரம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 25 கிமீ பரப்பளவு காட்டுப்பகுதியில் சிங்கத்தைத் தேடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிங்கம் மாயமானதால் நேற்றைய தினம் சபாரி திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications