அடுத்த ஆட்டத்தை ஆடும் மு.க. அழகிரி... விரைவில் உதயமாகிறது "கலைஞர் திமுக"?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கலைஞர் திமுக எனும் புதிய கட்சியை விரைவில் அறிவிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை படுஜோராக மேற்கொண்டு வருகின்றன.
ஆளும் அதிமுக, திமுக ஆகியவை கட்சிகளின் மாவட்டங்கள், ஒன்றியங்கள் என நிர்வாக அமைப்புகளை முழுமையாக மாற்றி அமைத்து வ்ருகின்றன. இன்னொரு பக்கம் ஒவ்வொரு கட்சியும் பிரமுகர்களை வளைத்து போடும் நடவடிக்கைகளிலும் பிஸியாக இருக்கின்றன.

தனித்தே இருக்கும் அழகிரி
அதேபோல் எந்த கட்சி எந்த கூட்டணிக்குப் போகும்? எந்த கூட்டணி நிலைக்கும்? சிதறும்? என்கிற விவாதங்களும் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த கோதாவில் இப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரும் கோர்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தீவிர அரசியலைவிட்டு தனித்தே இருக்கிறார் மு.க. அழகிரி.

அழகிரி- கருணாநிதி குடும்பம் பேச்சுவார்த்தை
கருணாநிதி மறைந்தபோது மீண்டும் திமுகவில் இணைவதற்கு பல பகீரத முயற்சிகளை மேற்கொண்டார் அழகிரி. இதற்காக கருணாநிதிக்கு நினைவஞ்சலி என்ற பெயரில் சில மாவட்டங்களில் கூட்டங்களையும் அழகிரி நடத்தினார். ஆனாலும் திமுக தலைமையானது அழகிரிக்கு ஒரு சிக்னலும் கொடுக்கவில்லை. இருப்பினும் கருணாநிதி குடும்பத்தினர் பேச்சுவார்த்தைகள் மூலமாக அழகிரியை அமைதியாக்கி வந்தனர்.

பாஜகவின் உற்சாகம்
அதேநேரத்தில் ரஜினி கட்சிக்குப் போவார்; பாஜகவுக்கு போவார் என்கிற தகவல்களும் அவ்வப்போது வலம் வரும். தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பாஜகவோ திமுகவை கலகலக்க வைக்க அத்தனை வேலைகளும் படுதீவிரமாக செய்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் திமுகவின் எம்.எல்.ஏ.வையே தமிழக பாஜக வளைத்தும் போட்டுவிட்டது. எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்துடன் பாஜக அடுத்த குழப்ப வேலைகளுக்கு கால நேரம் பார்த்து கொண்டிருக்கிறது.

மதுரை தகவல்
இந்த நிலையில்தான், ஆதரவாளர்கள் அனைவரும் அமைதியாக இருங்கள்.. விரைவில் அண்ணன் அழைப்பார்.. நமக்கான களம் தயாராகிவிட்டது என மு.க. அழகிரி ஆதரவாளர்களுக்கு மதுரையில் இருந்து தகவல்கள் போயிருக்கிறதாம். இது தொடர்பாக அழகிரி ஆதரவாளர்களிடம் நாம் பேசியபோது, கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சியை அழகிரி தொடங்கத்தான் போகிறார். கட்சி தொடங்குவதற்கான சரியான சந்தர்ப்பத்தைத்தான் அண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக தலைமை மீது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணங்களுக்காக சலசலப்பு இருக்கிறது.

உதயமாகிறது கலைஞர் திமுக?
ஆனால் வேறு ஒரு கட்சிக்குப் போகவும் முடியாமல் அரசியலைவிட்டு ஒதுங்கவும் முடியாமல் அதிருப்தியாளர்கள் பலரும் இருக்கின்றனர். அவர்கள்தான் அழகிரியை தொடர்பு கொண்டு நீங்களாவது கட்சியை தொடங்க வேண்டும் என கேட்கின்றனர். அண்மைக்காலமாக அழகிரிக்கு இந்த நெருக்குதல் அதிகரித்துள்ளது. அதனால்தான் கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சியை தொடங்குவது என முடிவு செய்துவிட்டார் அழகிரி. இதற்காகத்தான் தயாராக இருங்கள் என எங்களுக்கு மெசேஜ் தந்திருக்கின்றனர் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications