ஸ்டாலினை சந்தித்த மு.க.அழகிரியின் வலதுகரம் பி.எம். மன்னன்.. மீண்டும் தீவிர அரசியலுக்கு ஆயத்தம்!
சென்னை: மு.க.அழகிரியின் வலதுகரமாக அறியப்படும் மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், மீண்டும் தீவிர அரசியலில் செயல்பட ஆயத்தமாகி வருவதாகவும், அதற்கு முதல்வரின் கண்ணசைவு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாகவும், அவருக்கு எல்லாமுமாகவும் திகழ்ந்தவர் பி.எம்.மன்னன். மதுரை மாநகராட்சியின் துணை மேயராகச் செயல்பட்டவர். ஒரு காலத்தில் மதுரை மாவட்ட திமுகவில் முக்கிய முகமாக கோலோச்சியவர். மு.க.அழகிரி உடன் நின்றதற்காகவே கட்சித் தலைமையால் ஓரம்கட்டப்பட்டவர்.

மு.க.அழகிரி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு, அவரது ஆதரவாளர்கள் பலரும் ஸ்டாலின் பக்கம் ஐக்கியம் ஆகினர். ஆனால், மன்னன் அழகிரியை விட்டு விலகவில்லை. மன்னன், முபாரக் மந்திரி, இசக்கி முத்து உள்ளிட்ட திமுகவினர் அழகிரியின் ஆதரவாளர்களாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.
ஒருகாலத்தில் மதுரை திமுக என்றாலே அழகிரி தான் என்று இருந்த நிலை மாறி, மதுரை திமுக இன்றைக்கு, அழகிரி ராஜ்ஜியம் அற்றதாக மாறிவிட்டது. இந்நிலையில், தற்போது மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் உடனும் நெருக்கம் காட்டி வருகிறார். துணை முதல்வர் உதயநிதியும் அழகிரி குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான், அழகிரி ஆதரவாளரான பி.எம்.மன்னன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக சென்றபோது மதுரையில் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார் பி.எம்.மன்னன்.
வரும் சட்டசபை தேர்தலில் கட்சிப் பணி செய்ய ஆவலுடன் இருப்பதாகவும், கட்சிப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்திருக்கிறாராம் மன்னன். அதிமுக, பாஜக, தவெக என பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்தபோதும், பி.எம்.மன்னன் உள்ளிட்டோர் திமுகவில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கண்ணசைத்தால் கட்சியில் மீண்டும் தீவிரமாகப் பணியாற்றத் தயாராக இருந்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டிலும் கன்னியாகுமரிக்கு சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை, பூங்கொத்து கொடுத்து பி.எம். மன்னன் வரவேற்றுப் பேசினார். அப்போது, முதல்வர் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் இப்போது பச்சைக் கொடி காட்டுவார் எனக் கூறப்படுகிறது.
எனவே, விரைவில் பி.எம்.மன்னன் உள்ளிட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மதுரையில் கட்சிப் பொறுப்பு வழங்கி தேர்தல் பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணன் - தம்பி இடையே பகை மறந்து பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் குதிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications