"தைரியம் இருந்தால் பதிலை சொல்லுங்கள்.." சட்டசபையில் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலை நடைபெற்று இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக கொலை சம்பவம் நடந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கைது செய்தனர். அதேபோல் நெல்லை ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலையிலும் தேடப்பட்ட கிருஷ்ணமூர்த்தி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.

இதனால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலை நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக கொலை சம்பவம் நடந்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் நேற்று 4 கொலை நடைபெற்று இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கோவை சம்பவம் முதற்கட்டமாக தற்கொலை என்று விசாரணை தெரிய வந்துள்ளது. மதுரை காவலர் கொலை சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடைபெற்றுள்ளது.
ஈரோடு சம்பவத்தில் சரித்திரப் பதிவேறு குற்றவாளி நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலறிந்த காவலர்கள் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து செய்துள்ளனர். தொடர்ந்ந்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் காவல்துறை சுதந்த்ரிஅமாக செயல்பட்டு, குற்றவாளி யாராக இருந்தாலும் எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கூலிப் படைகளை கண்காணித்து கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது தேவையான நேரத்தில் குண்டர் சட்டமும் பதியப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 4,562 சமூத விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கை காரணமாக 2023ஆம் ஆண்டு 49,280 கொலை, கொள்ளை சம்பவம் நடந்த நிலையில், அது 2024ல் குறைக்கப்பட்டுள்ளது.
2024ல் 31,498 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ள. சில கொலை குற்றங்கள் நடைபெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகும் போது, அதிக குற்றங்கள் நடப்பதை போல், திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கை அடிப்படையில் 6 சதவிகிதம் கொலைகள் குறைந்துள்ளன. பழிக்குப் பழி வாங்கப்படும் கொலைகளும் குறைந்துள்ளன.
2023ஆம் ஆண்டு 181 மற்றும் 2024ல் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலக் கட்டத்தில் நடைபெற்ற கொலைகளை ஆண்டு வாரியாக ஒப்பிட்டு பார்க்கையில், அதிமுக ஆட்சியில் 2012ஆம் ஆண்டு 1,943 கொலைகள், 2013ல் 1,927 கொலை நடந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 2024ஆம் ஆண்டில்தான் மிகக் குறைவாக 1,540 கொலை நடந்துள்ளன என்று தெரிவித்தார்.
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தைரியம் இருந்தால்.. நான் சொல்வதை கேட்டுவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யுங்கள் என்று தெரிவித்தார். இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications