கொடூரம்.. இதில் யார் தீவிரவாதிகள்? விவசாயிகளா? அரசாங்கமா? பொங்கி எழுந்த ஸ்டாலின்!
சென்னை: போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுக்கு எதிராக முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கிறது பாஜக அரசு. இதில் யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பஞ்சாபிலிருந்து நேற்று காலை டெல்லி சலோ பேரணியைத் தொடங்கினர். இந்தப் பேரணியை பஞ்சாப் அரசு தடுக்கவில்லை. பேரணி இரண்டு மணி நேரத்தில் பஞ்சாப் ஹரியாணா எல்லையைத் தொட்டதும் அங்குள்ள ஷம்பு எல்லையில் விவசாயிகளை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீறிச் செல்ல விவசாயிகள் முயன்றபோது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் தடுத்து நிறுத்தினர்.

விவசாயிகளை தங்கள் மாநில எல்லையைத் தாண்டவிடக் கூடாது என்று உறுதியாக உள்ள ஹரியாணா பாஜக அரசு, எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலையில் ஆணிகள்: டெல்லி எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகளும், இரும்பு ஆணிகளால் செய்யப்பட்ட வேகத் தடைகளும் ஆங்காங்கே பலப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் வரும் வாகனங்களின் டயர்களை பஞ்சர் ஆக்கும் வகையில் சாலைகளில் ஆணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் பாஜக அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் பாஜக அரசைக் கண்டித்துள்ளார்.
சொந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிராக: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியத் தலைநகர் டெல்லியிலும், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போர் மேகங்கள் சூழந்தது போன்ற பதற்றத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் ஆணிப் படுக்கைகள், எல்லாத் திசையிலும் பாதுகாப்புக் காவலர்கள், கடுமையான பரிசோதனை நடவடிக்கைகள்.
தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? மத்திய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.
யார் தீவிரவாதிகள்?: மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது. அசைந்து கொடுக்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது.
அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்... உழவர்களா? அரசாங்கமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications