ராகுலை மட்டும் தான் ’பிரதர்’னு சொல்லுவேன்.. திமுக - காங்கிரஸ் நாட்டைக் காப்பாற்றும்! ஸ்டாலின் உறுதி!
சென்னை: மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பேசுகின்ற போது, விளிக்கின்ற போது யாரையும் நான் சகோதரர் என்று சொன்னது கிடையாது, ஆனால், ராகுல் காந்தியை பற்றி மட்டும் நான் விளிக்கின்றபோது அருமை சகோதரர் என்று நான் சொல்வதுண்டு என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சொக்கர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்," இந்த மணவிழா நிகழ்ச்சி ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறுகின்ற திருமணமாக நடந்தேறியிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெற்றது என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் அந்த திருமணங்கள் நடந்தேறி இருக்கிறது.

முக ஸ்டாலின்
ஆனால், 1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலாக சட்டமன்றத்தில் முதலமைச்சராக நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இன்று நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற நிலையில் நடந்தேறியிருக்கிறது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி
திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு காலத்தில், வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்றைக்கு நாட்டின் நன்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒரே அணியில் - அதே சிந்தனையுடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அதிலும், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது காட்டுகின்ற அன்பை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
ராகுல் காந்தி
"மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பேசுகின்ற போது, விளிக்கின்ற போது யாரையும் நான் சகோதரர் என்று சொன்னது கிடையாது; ஆனால், ராகுல் காந்தியை பற்றி மட்டும் நான் விளிக்கின்றபோது அருமை சகோதரர் என்று நான் சொல்வதுண்டு. காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், அவர் என்னை அண்ணன், மூத்த அண்ணன் - எப்போது பார்த்தாலும், என்னிடம் ஃபோனில் பேசுகின்ற போதும் சரி - நேரடியாக பார்க்கும் போதும் மை டியர் பிரதர் என்று தான் சொல்வார்.
நாட்டின் எதிர்காலம்
அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. எதற்காக சொல்கிறேன் என்றால், இந்த அளவுக்கு அரசியல் நட்பு மட்டுமல்ல; கொள்கை உறவாகவும் வலுப்பெற்று, இந்தியாவின் குரலாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த உணர்வைதான் நாங்கள் எல்லோரிடமும் எதிர்பார்க்கிறோம். தனிமனிதர்களுடைய நலனைவிட நாட்டின் நலன்தான் முக்கியம் என்ற உணர்வோடு, அந்த நட்புணர்வு இன்றைக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அரசியல் இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரிதலும் - கொள்கை உறவும் நிச்சயம் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். அது உறுதி.
ராகுல்-ஸ்டாலின்
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், நான் மணமக்களிடம் அன்போது நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மணமக்கள் தங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று நான் இந்த நேரத்தில், நான் பெற்றிருக்கக்கூடிய அந்த உரிமையோடு, அந்த குடும்பத்திற்கு என்னுடைய வேண்டுகோளாக வைத்து, மணமக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திடவேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications