'ஸ்டாலின் நச் பதிலடி'.. டெல்லிக்கு போய் திமுக எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும் என கேட்டவங்களுக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லிக்குச் சென்று, என்ன செய்யப்போகிறார்கள் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள். இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம், இனம்-மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்! டெல்லிக்குச் சென்று, என்ன செய்யப்போகிறார்கள் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள். இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம், இனம்-மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம், அதற்காக எமது உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈவோம் என்பதை, தங்களின் ஒவ்வொரு நாள் உயிரோட்டமான நடவடிக்கையிலும் மாற்றார் முகாமும் மலைத்திடும் வகையில், சாதித்துக் காட்டி வருகிறார்கள் நமது மக்களவை உறுப்பினர்கள்.

தமிழ்-பெரியார் வாழ்க

தமிழ்-பெரியார் வாழ்க

பதவியேற்பின்போதே நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க.. பெரியார் வாழ்க.. திராவிடம் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க....தலைவர் கலைஞர் வாழ்க.. என முழங்கியவர்கள் நம்மவர்கள். வாழ்த்து முழக்கங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமைப் போர் முழக்கமாக ஒவ்வொரு விவாதத்திலும் உயரிய கருத்துகளை எடுத்துரைக்கிறார்கள்.

டிஆர் பாலு உரை

டிஆர் பாலு உரை

நீட் தேர்வு எனும் கத்தி மாணவர்களின் மருத்துவக் கனவை அறுத்துச் சிதைப்பதைத் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையே இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்த துரோகத்தை மக்களவையில் கழக உறுப்பினர் நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் எடுத்துரைத்து, "ஒரு மாநில அரசின் தீர்மானத்தை நிராகரிப்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது" என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி வாதாடினார். மாநிலத்தில் கழகம் ஆட்சியில் இல்லை.

கனிமொழி வாதம்

கனிமொழி வாதம்

ஆட்சியில் இருப்பவர்களோ மத்திய அரசின் பல்லக்கைச் சதா காலமும் தங்கள் தலையிலும் தோளிலும் சுமக்கிறார்கள். ஆனாலும், மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுக்கும் மகத்தான இயக்கமாக நமது தி.மு.கழகம் இருக்கிறது. ரயில்வே துறையை தனியார்மயமாக்கிடவும் இந்தி மயமாக்கிடவும் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளைக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டின் திட்டங்கள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை என மக்களவையில் அன்புத் தங்கை கனிமொழி எடுத்து வைத்த வாதங்கள், எளிய மக்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் இருந்தன.

ஆ. ராசா குரல்

ஆ. ராசா குரல்

அரசியல் சாசனத்திற்கு விரோதமானதும், சமூக நீதித் தத்துவத்தைப் படுகுழியில் தள்ளுவதுமான பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களவையில் நீண்ட வரலாற்றுப் பின்னணியுடனும், நூற்றாண்டுகாலத் தரவுகளுடனும் அடுக்கி வைத்த சகோதரர் ஆ.இராசா அவர்களின் வாதம், ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்தது. அவையில் குரல் கொடுப்பதுடன் கழக உறுப்பினர்களின் பணி முடிந்து விடுவதில்லை. அதன் மீதான தொடர் நடவடிக்கைகளை நாள்தோறும் மேற்கொண்டு வருகிறார்கள்.

தயாநிதி மாறன் குரல்

தயாநிதி மாறன் குரல்

இந்தித் திணிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவகைகளில் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, அஞ்சல் துறையில் மாநில மொழிகளில் தேர்வெழுதும் வாய்ப்பைப் பறித்து, இந்தி-ஆங்கிலம் ஆகிய மொழியகளில் மட்டுமே இனி தேர்வெழுத முடியும் என அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரை நேரில் சந்தித்த கழக மக்களவை உறுப்பினர், அடுகடுக்கான வாதங்களை அஞ்சாது எடுத்துரைக்கும் தம்பி தயாநிதி மாறன், அஞ்சல் துறையின் அந்த உத்தரவை உடனே திரும்பப் பெற்றாக வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். ஏற்கனவே ரயில்வேயில் தமிழைப் புறக்கணிக்கும் வகையிலான சுற்றறிக்கை வெளியானபோதும், கழகத் தலைவரும் உங்களில் ஒருவனுமான என் ஆலோசனைப்படி தென்னக ரயில்வே பொது மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, உடனடியாக அந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறச் செய்யும் முயற்சியிலும் தம்பி தயாநிதி மாறன் சிறப்பான முறையில் ஈடுபட்டார். நமது முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்தது.

தலைமை நீதிபதியிடம் மனு

தலைமை நீதிபதியிடம் மனு

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒரே காலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் பட்டியலில், தமிழை உடனடியாகச் சேர்க்க வேண்டும் என்கிற தி.மு.க.வின் கோரிக்கை அடங்கிய மனுவை, கழகத்தின் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் மாண்பமை ரஞ்சன் கோகாயை நேரில் சந்தித்து வழங்கி-வலியுறுத்தியுள்ளார். செம்மொழித் தகுதி பெற்றதும்-எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் மூத்த மொழியும், தமிழ்நாட்டில் 8 கோடி மக்களின் (ஆட்சி) அலுவல் மொழியுமான தமிழ் மொழியில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட ஆவன செய்யப்பட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

திருமாவளவன் வாதம்

திருமாவளவன் வாதம்

அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் மக்களவையில் உரையாற்றும்போது, ரயில்வே துறையில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பணிகள் வழங்க வேண்டும் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார். கழகத்தின் வெற்றிச் சின்னத்தில் களம் கண்டு எம்.பி.யான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கடிதங்கள் இந்தியில் மட்டுமே வழங்கப்படுவதாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி. அ.கணேசமூர்த்தி அவர்கள், தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து தீர்க்க வலியுறுத்தினார். இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் பெரம்பலூர் இருப்புப் பாதைத் திட்டம் குறித்து கவனம் ஈர்த்திருக்கிறார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் அவர்கள், கோழிப் பண்ணைத் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்திட வற்புறுத்தியுள்ளார்.

போராடி கொண்டிருக்கிறோம்

போராடி கொண்டிருக்கிறோம்

என்ன செய்ய முடியும் எனக் கேட்டவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் மக்கள் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட ஜனநாயக வழியில்-அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழியில் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்களோ,நம்முடைய வெற்றியையும் அதன் தொடர்ச்சியாக நடைபெறுகிற தூய பணிகளையும் பொறுத்துக் கொள்ளமுடியாமல், மிட்டாய் கொடுத்து குழந்தைகளை ஏமாற்றுவதுபோல வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டதாக ஜனநாயகத்தன்மை அற்றவர்களாக - நாக்கில் நரம்பில்லாதவர்களாக, நாலாந்தரத்தில் பேசுகிறார்கள்.

வேலூர் தேர்தலில் வெல்வோம்

வேலூர் தேர்தலில் வெல்வோம்

திட்டமிட்டு சதி செய்து-வீணாகப் பழி போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. வேலூர் கோட்டை எப்போதும் கழகத்தின் வெற்றிக் கோட்டை, இப்போதும் அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் களப்பணி ஒப்பிட்டுக் காட்ட முடியாத உயர்பணியாக அமைந்திட வேண்டும். தி.மு.கழகத்தின் சார்பில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒலிக்கின்ற ஒவ்வொரு குரலும் நம் உரிமைக்கான போர்க் குரலாகும். அதற்கேற்ப, வெற்றிப் பயணம் தொடரட்டும்! உரிமைப் போர்க்குரல் உயரட்டும்! இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+