Only personal..ரெஸ்ட் எடுக்க விடுங்க! ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..தவிப்பில் சீனியர் - ஜூனியர்!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல உள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்களில் இது ஓய்வுக்கான பயணம் என்று கூறப்பட்டாலும், அரசியல் வட்டாரங்களில் இந்த பயணம் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம் எனவும் கொடைக்கானலில் தன்னை சந்திக்க அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் என யாரும் வரக் கூடாது என மதுரையிலேயே முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாள் வரை முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழகம் முழுவதும் பல பகுதிகளுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டார்.
இதனால் ஏற்பட்ட சோர்வை போக்கவும், சில நாட்கள் அமைதியான சூழலில் ஓய்வு எடுக்கவும் இந்த பயணம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை சென்னை நகரில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் மதுரை வந்தார் ஸ்டாலின்.

கொடைக்கானல் பயணம்
அதன் பின்னர் மதுரையிலிருந்து கார் மூலம் மலைநகரமான கொடைக்கானலுக்கு சென்று உள்ளார். அங்கு உள்ள தனியார் விடுதியில் தங்கி சுமார் ஐந்து நாட்கள் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 29-ம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என அதிகாரப்பூர்வ தரப்பில் கூறப்படுகிறது. 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்கள், அதேபோல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் முதல்வர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று ஓய்வு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள்
அதைத் தொடர்ந்து, இந்த முறையும் தேர்தல் பணிகள் முடிந்தவுடன் அதே கொடைக்கானலைத் தேர்வு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ளதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.
புதிய அமைச்சரவை பட்டியல்
இந்த சூழலில் முதல்வரின் கொடைக்கானல் பயணம் இயல்பாகவே அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. சில திமுக சீனியர்கள் கூறும் போது," இது வெறும் ஓய்வு பயணம் மட்டுமாக இருக்காமல், அடுத்த ஆட்சிக்கான புதிய அமைச்சரவை பட்டியல் ஆரம்ப நிலை ஆலோசனைகளுக்கும் வாய்ப்பாக இருக்கலாம் என்கின்றனர். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடு, மக்களிடையே அவர்களுக்கு உள்ள ஆதரவு, தொகுதிகளில் கிடைத்த வாக்கு நிலவரம் போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.
சீனியர் அமைச்சர்கள் மாற்றம்
இதற்கிடையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட பயணமாக துபாய் சென்றிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முதல்வர் கொடைக்கானலில் தங்கும் நாட்களிலும், தேர்தல் முடிவுகள் குறித்து கட்சிக்குள்ளும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி அமைச்சரவையில் இருக்கும் சில சீனியர்கள் இந்த முறை கழற்றிவிடப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய அமைச்சரவை பட்டியல்
மக்கள் மத்தியில் அவப்பெயர் பெற்றவர்கள், கட்சி நிர்வாகிகளை மதிக்காதவர்கள் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், என பலரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின் என்கின்றனர். இதற்கான பட்டியல் ஸ்டாலின் தனது மருமகன் சபரீசன் மூலம் தயாரித்து வருகிறார் என்கின்றனர். மேலும், சில புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்பதால் பலர் அமைச்சர் ஆசையில் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கும் அனுமதியில்லை
இந்த நிலையில் தான் திண்டுக்கல் திமுக நிர்வாகிகள் தரப்பில் இருந்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் காரணமாக சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஓய்வின்றி உழைத்திருக்கிறார். முழுக்க முழுக்க ஓய்வெடுப்பதற்காக மட்டுமே கொடைக்கானல் வருகிறார். அங்கு அமைச்சரவை பட்டியல் தயாராகிறது என்பதெல்லாம் உண்மை இல்லை. தற்போதைய சூழலில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் மூலம் கொடைக்கானலில் அவர் தங்கி இருக்கும் இடம் சுற்றிப் பார்க்க உள்ள பகுதிகள் குறித்து ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. யாரையும் தன்னை பார்க்க அனுமதிக்க கூடாது என தனியார் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டிருக்கிறார். அதனால் சீனியர்கள் கூட முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க முடியாது" என்கின்றனர்.














Click it and Unblock the Notifications