தமிழ்மீடியத்தில் படித்தவர்களுக்கு.. தமிழக அரசுப் பணியில் 20 % இடஒதுக்கீடு என்னானது? -ஸ்டாலின் கேள்வி
சென்னை: தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு, 8 மாதங்களாகத் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்? என ஸ்டாலின் வினவியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திமுக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலையை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சட்ட மசோதா
"பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்" என்று கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

ஒப்புதல் இல்லை
இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெற அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று, சமீபத்தில் என்னைச் சந்தித்த போட்டித் தேர்வுகளுக்குப் பயிலும் மாணவர்கள் தெரிவித்தார்கள். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞரே, 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

காலம் கழிக்கிறார்?
அத்துறைக்கான அமைச்சர் என்ன செய்கிறார்? சட்ட அமைச்சர் என்ன மாதிரி மனநிலையில் இத்தனை மாதங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்?இவர்களுக்கு எல்லாம் தற்சமயம் தலைவராக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, தமிழக அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா, இல்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

அரசு இயந்திரம்
"சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்" எனச் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு கற்பனைக் கதையை "செய்தியாக்கி" அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டு வந்தால் மட்டும் போதாது - நிர்வாகத்தில் எஞ்சியிருக்கின்ற நாட்களில் உள்ளபடியே முதலமைச்சர் சிறிதளவாவது கவனம் செலுத்த வேண்டும்.

நேரில் செல்க
எனவே, துவக்கத்திலிருந்து தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க - மார்ச் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சரே நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தி இந்தச் சட்டத்திருத்தத்திற்கான ஒப்புதலை எவ்விதத் தாமதமும் இன்றிப் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications