கொரோனா பரவல்... மக்கள் மீது பழிபோடுவதை முதல்வர் நிறுத்த வேண்டும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: கொரோனா பரவலுக்கு, கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முதல்வர் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வாழப் பழகு
"கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது" என்று முதலில் "ஆரூடம்" சொன்ன ஆட்சியாளர்கள், அதன்பிறகு "வந்தாலும் ஆபத்தில்லை" என்றார்கள். நோய்த்தொற்று அதிகரித்து, உயிரிழப்புகளும் வளர்ந்து தொடரும் நிலையில், "நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்" என்கிறார்கள்.

திடீர் முடிவுகள்
தற்போது தமிழகத்தில் சமூகத் தொற்றை எதிர்கொண்டிருக்கிறோமோ என்ற ஆபத்தான சூழலில், அதற்குப் பொதுமக்கள் மீதும் வணிகர்கள் - தொழிலாளர்கள் மீதும் பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஏறத்தாழ 50 நாட்களுக்கும் மேலாக, வருமானத்தை இழந்து, வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே பெருமளவில் நடந்து கொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களைத் திக்கு முக்காட வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.

பழி சொல்லாதீர்
ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட முயற்சி செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை எனப் பழியைத் தூக்கி வணிகர்கள் மீது போட்டுள்ளார்.

அச்சம்; பரபரப்பு
"மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்" என்று அறிவியல் அடிப்படை ஏதுமின்றி பொய் வாக்குறுதி அளித்த முதலமைச்சர், இப்போது "நோய்த் தொற்று அதிகமாகி, பிறகுதான் இறங்கும்" என்று குழப்பமான அறிவிப்பை வெளியிடுகிறார். கொரோனா குறித்து, தான் வெளியிடும் அறிவிப்புகள், எத்தகைய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அச்சத்தையும் பரபரப்பையும் உருவாக்கும் என்பதைச் சற்றும் எண்ணிப் பார்க்காமலேயே செய்கிறார்.

வலியுறுத்தல்
ஏழை - எளிய விளிம்பு நிலை மக்கள், கையில் வாங்கும் சக்தி இல்லை எனும்போது, தேவையான உணவுப் பொருள்களை எங்ஙனம் வாங்கி நுகரமுடியும் என்பதை அறியாதவரா முதலமைச்சர்? அதனால்தான், அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமாகத் தர வேண்டும் என்று தொடக்கம் முதலே வலியுறுத்திவருகிறேன்.












Click it and Unblock the Notifications