அர்த்தராத்திரியில்.. சுய அரிப்பை சொறிந்து கொள்ள முயன்றால்.. ஓட ஓட விரட்டுவார்கள்.. ஸ்டாலின் வார்னிங்
சுவரொட்டி குறித்து முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: "அர்த்தராத்திரியில் அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலமாக, சுய அரிப்பைச் சொறிந்து கொள்ள விரக்தியின் விளிம்பிலே நிற்பவர்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்க போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்.. என்னை எதிர்த்து தாழ்ந்த முறையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், உள்ளதாவது: "வெட்கித் தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப் பேர்வழிகளால் தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சட்ட நெறிமுறைகளின்படி, அந்தச் சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய அச்சக முகவரியும் இல்லை.

ஊழல் கொள்ளைகளில் ஈடுபடுவோர், கொடுப்பவர் - வாங்கிக் கொள்பவர் பெயர்களைப் புதைத்து வைத்திருப்பார்கள் அல்லவா; அதைப்போல! எடப்பாடி பழனிசாமியைப் புகழும் வாசகங்கள் ஒரு பக்கமும், எதிர்க்கட்சித் தலைவரான என்னை இகழ்ந்து இன்னொரு பக்கமும் கொண்ட வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
என்னை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். என்னை விமர்சிப்பவர்கள், விமர்சனம் செய்வதற்குரிய தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். தகுதி இல்லாத சில நபர்களால், போகிற போக்கில், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்னும் நோக்கில், இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்படுவது, அவற்றில் இடம் பெற்றுள்ள வாசகங்களிலிருந்து தெரிகிறது.
இந்த இழிசெயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடையாளமற்ற, முகவரியற்ற இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அதனை உடனடியாகத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது; காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இருக்கிறது.
ஆனால், இதுவரை அத்தகைய சுவரொட்டிகளை ஒட்டுவதைத் தடுக்கவோ, அல்லது அந்த அநாமதேய சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்யவோ எந்த மாவட்டக் காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இருப்போரின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்தியக் குற்றவியல் சட்டம், புத்தகங்கள் பதிவுச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை தரத்தக்க குற்றங்கள் இவை.
பல மாவட்டங்களில் இந்தச் சுவரொட்டிகளைத் திமுக தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயல்களில் அவர்கள் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தரம் தாழ்ந்த சுவரொட்டிகளைக் கண்டு, திமுக தொண்டர்கள் கொள்ளும் ஆத்திரமும் ஆவேசமும் எனக்குப் புரியாமல் இல்லை.
தன்னை அவதூறு செய்து வைக்கப்பட்ட பேனரை, அனைவரும் இரவிலும் நன்றாகப் படித்துச் செல்ல வசதியாக, விளக்கு ஒன்றைப் பொருத்தி வைத்தார் அண்ணா; 'இந்த விளக்கு மட்டும் அண்ணாதுரை உபயம்' என்று எழுதி வைத்தார். அந்த வழியில் வந்தவர்கள் நாம். 'வாழ்க வசவாளர்கள்' என்றே வாழ்த்துவோம். நமது வெற்றி உறுதி என்பதை உணர்ந்துகொண்டு, நம்மை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இப்போது நாம் கடைப்பிடித்திட வேண்டியது பொறுமை, பொறுமை! 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது முதுமொழி. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்' என்பது வள்ளுவம். ஆட்சிக்கு முற்றிலும் எதிரான தமிழ் மக்களின் மனநிலையை மாற்ற என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் பயன் தரவில்லை என்பதால், இப்போது சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள்.
பவிசுகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடகங்களில் உள்ள சிலர் மூலம், தங்களுக்குச் சாமரம் வீசும் கட்டுரைகளையும், காட்சிகளையும் உருவாக்கி வரும் ஆளும் கட்சிக் கும்பலின் அடுத்தகட்ட உத்திதான், கண்ணும் கருத்தும் கூசும் இந்தக் கேவலமான சுவரொட்டிகள்.
கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எள் அளவுக்குக் கூட முயற்சிகள் எடுக்காத ஒரு கொள்ளைக் கூட்டம்; இருட்டறையில் குருட்டுப் பூனையைத் தேடும் எத்தர்களைப் போல, அர்த்தராத்திரியில் அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலமாக, சுய அரிப்பைச் சொறிந்து கொள்ள விரக்தியின் விளிம்பிலே நிற்பவர்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்கப் போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications