எப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல் நலம் எப்படி உள்ளது, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் மருத்துவமனை சென்று டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
Recommended Video

கல்லீரல் பிரச்சினையுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்டிலேட்டர் கருவியின் உதவியால் அவர் சுவாசித்து வருகிறார். அவரது உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டாக்டர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். அதேபோல மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் நேரில் சென்று விசாரித்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிட்யூட் அண்ட் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அவர்களின் உடல் நலன் குறித்து நாள்தோறும் தொலைபேசி வாயிலாக விசாரித்தறிந்து வந்தார்.

இந்த நிலையில், இன்று (6-6-2020) காலை, அம்மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜெ.அன்பழகன் அவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவினர்களான அம்மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மருத்துவர். முகமது ரேலா, மருத்துவர். இளங்குமரன் ஆகியோரிடத்தில், அவரது உடல் நலன் குறித்தும் - அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மு.க.ஸ்டாலினுடன் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தார். மருத்துவர்களுடனான இச்சந்திப்பின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பியும் உடன் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications