நிதி பிரச்சனை இல்லை, மனசு தான் வேண்டும்... முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் முதல் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே... அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
"நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்" எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.
கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
விஜய் முதல்வரான உடன் பேசியது என்ன
தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் இன்று நேரு ஸ்டேடியத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு மேடையில் பேசிய முதல்வர் விஜய், "எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும்.
மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை. உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள். நீ வா தம்பி நாங்க பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்
என்னை முதல்வராக்கியிருக்கிறீர்கள். என்னுடைய உறவுகளே, சொந்தங்களே நான் தேவதூதன் கிடையாது. அது செய்வேன், இது செய்வேன் எனச் சொல்லி ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியம் என்பதை மட்டுமே செய்வேன். தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். அப்படியான ஒரு நிலையில் தான் இந்த பொறுப்பை நான் கையில் எடுத்திருக்கிறேன்.
அரசிடம் என்ன இருக்கிறது எது இல்லை என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். அதை தான் முதலில் செய்ய இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு, மறைவு இல்லாமல் செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்பை ஸ்ட்ரிக்டாக வைத்திருப்பேன். போதைப்பொருள் தடுப்புக்கு உரிய முயற்சி எடுப்பேன். சட்டம் ஒழுங்கு மூலம் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான்.
கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். இந்த விஜய் தவறு செய்ய மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, தவறு செய்ய விடமாட்டேன். என் தலைமையில் தான் முழு அதிகாரமும் இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications