'பெரியாருக்கு தமிழக அரசு செய்யும் நன்றி..' சமூக நீதி நாள் அறிவிப்புக்கு கமல் பாராட்டு
சென்னை: பெரியார் பிறந்த நாளை சமூக நிதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்கக் காரணமாக இருந்த பெரியாருக்கு அரசு செய்யும் நன்றி அறிவிப்பு இது எனக் கமல் பாராட்டியுள்ளார்
இனி ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதை பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்று கருத்து கூறி வருகின்றனர்.

சமூக நீதி நாள்
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்தியா முழுமைக்கும் சமூக நீதி பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். இதனால் அவரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் என்று கூறினார்.

கமல் ட்வீட்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தமிழ்நாடு அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிறந்த நாள் 'சமூக நீதி நாள்' எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு. பாராட்டுக்குரிய செயல்" என பதிவிட்டுள்ளார்.

பெரியார் பொன்மொழிகள்
முன்னதாக ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், பெரியாரின் பொன்மொழிகள் அனைவரது வீடுகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பெரியாரின் கருத்துகள் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இடம் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் கூறியதைப் போலப் பெரியாரால் தான் நாம் இங்கு அமர்ந்திருக்கிறோம். பெரியார் இல்லையென்றால் யார் இங்கு இருப்பார்கள் என்பதைச் சுதந்திரத்திற்கு முன் இருக்கும் சட்டசபையை எடுத்துப் பார்த்தால் நமக்குத் தெரியும் என்றார்.

துரைமுருகன் உருக்கம்
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "பெரியார் மறைந்த போது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கருணாநிதி விரும்பினார். ஆனால், அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர் பெரியார் எந்தவொரு அரசு பதவியிலும் இல்லை என்பதால் அவருக்கு எப்படி அரசு மரியாதை அளிக்க முடியும் என்ற கேட்டார். அப்போது கருணாநிதி, காந்தி எந்த அரசு பதவியிலிருந்தார் என்பதற்காக அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது எனக் கேட்டார். மேலும், இதனால் தனது ஆட்சி கலைக்கப்படுகிறது என்றால், பெரியாருக்காக இந்த ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டுப் போவேன் என்று கருணாநிதி சொன்னார். அதன் பிறகே பெரியாருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications