ஆளுநர் அதிகார பறிப்பு மசோதா கொண்டுவர காரணமே நாங்கதான்... உரிமை கோரும் மக்கள் நீதி மய்யம்
சென்னை: தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை இனி ஆளுநருக்குப் பதில் மாநில அரசே நியமிக்கும் என்கிற மசோதாவை சட்டசபையில் கொண்டுவர வேண்டும் என முதலில் கோரிக்கை விடுத்ததே தங்கள் கட்சிதான் என்று மக்கள் நீதி மய்யம் உரிமை கோரி இருக்கிறது.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் திமுக அரசின் நீட் விலக்கு கோரும் மசோதா உள்ளிட்டவைகளை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் போட்டு வைத்திருகிறார் ஆர்.என்.ரவி.

இது ஆளும் திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே திமுக வலியுறுத்தியது. அத்துடன் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் கூட்டங்களை அமைச்சர்கள் புறக்கணித்தனர். மேலும் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தின.
இதன் உச்சகட்ட மோதல்தான் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசை புறந்தள்ளிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியே தன்னிச்சையாக உதகையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியுள்ளார். இது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆளுநரின் இந்த போக்குக்கு பதிலடி தரும் சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதாவது தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் மாநில அரசுதான் நியமிக்கும் என்பதற்கான மசோதா இது. சட்டசபையில் இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது. பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் (30.12.2021) அறிக்கையை ஏற்று செயல்பட்ட அரசுக்கு நன்றி. இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் மநீம பதிவிட்டுள்ளது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு வெளியிட்ட ட்விட்டர் பதிவையும் மறு பகிர்வு செய்திருக்கிறது மநீம.
Recommended Video



Click it and Unblock the Notifications
