வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்.. இன்று நடக்கும் பெரிய மாற்றம்! 4 நாள் கொட்டப்போகும் மழை-அலர்ட்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ள நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்கள் பல முக்கிய இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய உள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தியது. இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு கத்தரி வெயில் காலம் தொடங்கியது. இதனால் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து மக்களை வாட்டும் என எண்ணப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பல மாவட்டங்களில் கோடை மழை கொட்ட துவங்கியது.

இதனால் மக்கள் கத்தரி வெயிலின் பிடியில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் தான் வங்கக்கடலில் நாளை புதிய புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. இதற்கு மோக்கா என பெயர் சூட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரம் வருமாறு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுபகுதி நேற்று காலை உருவானது. இது இன்று (மே 9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்வரும் 11ம் தேதி நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் திரும்பி, வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 10, 11, 12-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிகோபார்தீவுகள் மற்றும் அவற்றையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரைமணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது. இது தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது இன்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை நாளை புயலாகவும் வலுப்பெற உள்ளது. அதன்பிறகு வரும் 12ம் தேதி வங்கதேசம் மியான்மர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications