தமிழகம் வரும் மோடி? ஆளுநர் மாற்றம் உறுதியா? ரவியிடம் அமித்ஷா பேசியது என்ன? டெல்லி பரபர!
சென்னை: ஆளுநர் ஆர் என் ரவிக்குப் பதிலாக வேறு ஆளுநர் நியமிக்கப்படுவாரா? அல்லது இவரே தொடர்வாரா? அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி உடனான சந்திப்பில் பேசப்பட்ட விசயங்கள் என்ன? இந்த அவசர சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரே மீண்டும் பதவியில் தொடர்வாரா? அல்லது வேறு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற ஒரு கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே தான் கடந்த 17 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு பற்றி ஆர் என் ரவி எக்ஸ் தளத்தில், “"மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
அமித்ஷாவைச் சந்திப்பதற்கு முன்பாக ரவி, பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடி இருந்தார். இவர் மோடியைச் சந்தித்திருப்பதால் கட்டாயம் இவரே ஆளுநராகத் தொடரக் கூடும் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ரவி, விரைவில் விடைபெறுவதாக இருந்தால் அவர் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச வேண்டிய தேவை இருந்திருக்காது என்று பாஜக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. மேலும் பிரதமருடனான ஆளுநரின் சந்திப்பே அவர் பதவியில் தொடரப்போகிறார் என்பதை உறுதிசெய்துள்ளது என்றே அரசியல் வியூகர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. உண்மையில் டெல்லி வட்டாரம் என்ன சொல்கிறது? ஆளுநர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் சில தகவல்களை ஒரு யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆளுநர் மாற்றம் பற்றி அவர் பேசுகையில், “2026 சட்டசபைத் தேர்தலைத் தமிழகம் சந்திக்க இருக்கிறது. அதை நோக்கித்தான் பாஜக தனது செயல்திட்டங்களை வகுத்து வருகிறது. அப்படிப் பார்த்தால், இந்தத் தேர்தல் காலம் முடியும் வரை பாஜகவுக்குச் சரியான வகையில் ஒத்துழைக்கக் கூடிய ஆளுநராக ஆர் என் ரவி இருந்து வருகிறார். அவர் திமுகவுக்குச் சரியான பதிலடி தரக்கூடியவராகச் செயல்படுகிறார்.
ஆகவே, மத்திய அரசுக்கு அவர் இங்கே ஆளுநராகத் தொடர்வதில் எந்தவித சிக்கலும் இல்லை. அதனால் வரும் 2026 வரை ஆர் என் ரவி மாற்றப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தான் தெரிகிறது. அவரையே ஆளுநராக மத்திய அரசு தொடர்ந்து நியமிக்கும் என்றுதான் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்த மாநிலத்தின் ஆளுநரையும் பிரதமர் அடிக்கடி சந்திப்பது இல்லை. தேர்ந்தெடுத்துத்தான் சிலரை மட்டும் சந்தித்து வருகிறார். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர் என் ரவி ஏன் அவசர அவசரமாக அழைக்கப்பட்டார் என்று விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது மணல் கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம் பற்றிய விமர்சனங்களை வைத்திருந்தார். அது தொடர்பாக விவாதிப்பதற்காகத்தான் ஆளுநர் ரவி அழைக்கப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
கூடவே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மாயாவதி உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதன் நகல் ஆர் என் ரவிக்கு உள்துறை அமைச்சரகம் அனுப்பி இருந்தது என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, அமித்ஷாவிடம் இந்தக் கொலை தொடர்பாக ரவி விவாதித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் நீதிமன்றத்தின் மூலம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் சொல்கின்றன.
மேலும் 2025 ஜனவரியில் முதல்வர் ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்த முடிவு செய்திருக்கிறார். அதைப் பிரதமர் மோடிதான் தொடங்கி வைக்க இருக்கிறார். அதில் 4 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே ஸ்டாலின் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதைப்போலவே அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார். மதுரையில் மெட்ரோ திட்டம் அடிக்கல் நாட்டுவதற்காக அவர் வருகிறார்” என்கிறார்.












Click it and Unblock the Notifications