கொள்ளையர்கள்.. நாற்காலியை காப்பாற்ற பொய் சொல்லும் கபடர்கள்.. பல்லடம் கூட்டத்தில் மோடி சரமாரி தாக்கு
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வளர்வதை பொறுத்துக்கொள்ள முடியாத கொள்ளையர்கள் தங்களின் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பொய்களை சொல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.

பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் இதயங்களில் இடம் பெற்றுள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது. தொழில்துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. மிகப்பெரிய அளவில் கூடியுள்ள மக்களுக்கு நன்றி. அரசியல் வளர்ச்சியில் புதிய மையமாக மாறியுள்ளது தமிழகம்.
தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும். நாடு வளரும் அதே நேரத்தில் தமிழ்நாடும் வளர்ச்சி அடையும் என்பதே மோடியின் உத்தரவாதம். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது இங்குள்ள கொள்ளையர்களுக்கு பொறுக்கவில்லை.
பல ஆண்டு காலமாக இந்த தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் பாஜக வளர்வதை புரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி பலத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாக மக்களுக்கு பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களை திசை திருப்பி மக்களுக்குள் சண்டையை மூட்டி பொதுமக்களை பிரித்து அவர்களுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மோடி எப்போதும் நல்லது செய்ய மாட்டார் என்று பொய்யாக பரப்புரை செய்கிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகமும் காங்கிரஸ் கட்சியும் பல ஆண்டு காலமாக ரொம்ப காலம் ரொம்ப நண்பர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் 2004 முதல் 2014 வரை மிகப்பெரிய அமைச்சரவையில் மிகப்பெரிய முக்கியமான பதவிகளை வைத்திருந்தார்கள் ஆனால் அவர்கள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக எந்த ஒரு திட்டத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை.
பாஜகவின் வளர்ச்சியை பார்த்து மக்களை பிரித்து நாற்காலியை காப்பாற்றி கொள்ள பொய்களை சொல்லிகொண்டு இருக்கின்றனர் கொள்ளையர்கள். அவர்களின் கபட நாடகம் வெளியே வந்து விட்டது. ஊழல்கள் வெளியே வந்து கொண்டு இருக்கின்றது.
இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேசமே பிரதானம் என கருதி பாஜக தொண்டர்கள் உழைக்க வேண்டும். என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மக்கள் அற்புதமான வரவேற்பு அளித்துள்ளார்கள் என்பதற்கு நீங்களே சாட்சி.
2024இல் தமிழகம் புதிய சரித்திரம் படைக்கும். தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கிறது என்பது இங்கு கூடியுள்ள மக்களின் மூலம் நிரூபணம். மண்ணும் கடவுளும் ஒன்று கருதி பாஜக உழைத்து வருகிறது. காசி தமிழ் சங்கம், செங்கோல் மூலம் தமிழுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னுரிமை அளித்து வருகிறது. மோடி அளித்த உத்தரவாதத்தின்படி தமிழக மக்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றரை கோடி மக்களுக்கு பாஜக அரசு இலவச அரிசி வழங்கி வருகிறது. மோடியின் உத்தரவாதம் என்பது பல ஆண்டு காலத்திற்கு தொடரும் என்றும் மோடி தெரிவித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது மோடி அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்தது. அதன் காரணமாகவே 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக கூட்டணி. எனவேதான் திமுக கூட்டணி இந்தியா கூட்டணி பொய்களை சொல்லி கபட நாடகம் ஆடுவதாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.
இந்தியா கூட்டணி கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. அந்த கொள்ளைக்கூட்டணி கடையை மூட வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மோடி தெரிவித்தார். பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார் பிரதமர் மோடி












Click it and Unblock the Notifications