பருவமழை எதிரொலி.. 37 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரத்தில் மாற்றம்! முக்கிய அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே
சென்னை: தமிழகத்தில் மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஜூன் மாதம் பருவமழை சற்று தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் இருந்து மேற்கு கடற்கரையில், அதாவது மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வழியாக செல்லும் ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில், 37 விரைவு ரயில்களுக்கு நேர மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியன் ரயில்வேயில் கொங்கன் வழித்தடம் என்று ஒன்று இருக்கிறது. மேலே குறிப்பிட்டதை போல மேற்கு கடற்கரை மாநிலங்களை இந்த ரயில் தடம் இணைக்கிறது. மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இந்த வழித்தடம் உள்ளது. தமிழகத்திலிருந்து இதன் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை காரணமாக 37 விரைவு ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 15 முதல் அக்.20 வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும்.
அதன்படி, திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஹப்பாவுக்கு செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்-19577) ஜூன் 15-லிருந்து காலை 5.05-க்கு புறப்படும். அதே போல, திருநெல்வேலி டூ குஜராத் காந்திதாம் செல்லும் விரைவு ரயிலும் (எண்:20923) காலை 5.5-க்கு புறப்படும். கோயம்பத்தூரிலிருந்து ஹரியானா மாநிலம் ஹிசார் செல்லும் விரைவு ரயில் (எண்:22476) பிற்பகல் 1.30-க்கு புறப்படும்.
மும்பை தாதரிலிருந்து திருநெல்வேலி வரும் விரைவு ரயிலும் (எண்:22629), திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு தாதருக்கு செல்லும் ரயில் (எண்:22630) உள்பட 37 விரைவு ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மழை காரணமாக நேரம் மாற்றம் ஒருபுறம் அறிவிக்கப்பட்டாலும், பராமரிப்பு பணிகள் காரணமாகவும் ரயில் சேவையில் மாற்றம் நடந்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ராமநாதபுரம் பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, திருச்சியில் இருந்து ஜூன் 12, 14, 16, 21, 23 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் காலை 7.05-க்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்.16849) மானாமதுரை -ராமேஸ்வரம் இடையே, பகுதி ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்திலிருந்து அதே தேதியில் மாலை 3-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரயில்(எண்:16850), ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்படுவதற்கு மாறாக மானாமதுரையிலிருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
மேலும், ராமேஸ்வரத்திலிருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரயில் (எண்:07696), அதற்கு மாற்றாக ராமேஸ்வரத்திலிருந்து இரவு 7க்கு (9 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு செகந்திராபாத் செல்லும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜூன் 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.05-க்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரயில் (வண்டி எண்.12712), வழக்கத்துக்கு மாறாக சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.25-க்கு (20 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
இதேபோல, திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்.20606), பண்ருட்டி ரயில் நிலையத்தில் காலை 6.04-க்கு வந்து செல்லும். இந்தநிலையில், புதன்கிழமை (ஜூன் 11) முதல் 25 நிமிடம் தாமதமாக, அதாவது காலை 6.29-க்கு வரும். ஆனால், திருச்செந்தூர்-திருப்பாதிரிப்புலியூர் மற்றும் விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications