10,000 பேருக்கு வேலை.. திருவள்ளூரில் அமையவுள்ள 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா'..ஏன் முக்கியம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ரூ 1,200 கோடி முதலீட்டில் 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால் ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த நிகழ்ச்சியில் தனியார் பங்களிப்புடன் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் National Highway Logistics Management Ltd., சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மப்பேட்டில் ரூ 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

முக்கியமான நாள்
இதன் பின்னர் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், "தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றில் இது முக்கியமான ஒரு நாள். தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய பகுதியில் 158 ஏக்கர் பரப்பளவில் 1,200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது.

எங்கே அமைகிறது
பெரிய தொழிற்சாலைகள் அதிகம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இந்த அமைய உள்ளது. மேலும், சென்னை எல்லை சுற்று வட்டச் சாலைக்கு மிக அருகிலும் இந்த பூங்கா அமைகிறது. இதனால் சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றைச் சிறப்பாக இணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
Recommended Video

என்ன வசதி
உலக தரத்தில் அமையவுள்ள இந்த பூங்காவில் சரக்குகளை விரைவாக எடுத்துள்ள ஏதுவாக ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம் அமையவுள்ளது. சேமிப்புக் கிடங்கு, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, இயந்திரங்கள் மூலம் சரக்குகளைக் கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் என உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இந்த பூங்காவில் அமையவுள்ளது.

வேலைவாய்ப்பு
இதன் மூலம், சரக்குப் போக்குவரத்துச் செலவு பெரியளவில் குறையும். இந்த பூங்கா மூலம் மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் மேலும், சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைக்கத் தமிழ்நாடு மாநில சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக டிட்கோ சார்பில் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

வேண்டுகோள்
கோவை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இது போன்ற பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பைத் தரும். இப்போது திருவள்ளூரில் அமையவுள்ள பல்முனையப் சரக்கு போக்குவரத்துப் பூங்காவில், ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத் தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications