அமெரிக்காவில் 19 நிறுவனத்துடன் ரூ.7,618 கோடிக்கு தொழில் முதலீடு.. சென்னையில் பட்டியலிட்ட ஸ்டாலின்
சென்னை: அமெரிக்க சுற்றுப்பயணத்தில் 19 நிறுவனங்களுடன் தொழில் முதலீடு தொடர்பாக ரூ.7,618 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 11,516 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மற்றும் தொழில் முதலீடு பற்றி அவர் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

அமெரிக்க நாட்டுக்கு சென்று அரசு முறை பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளேன். இந்த பயணம் வெற்றிகரமான பயணமாகவும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கான சாதனை பயணமாகவும் அமைந்துள்ளது.
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவும், தொழில் முதலீடுகளை வைக்கும் முயற்சியாக 28.2.2024 அன்று அமெரிக்கா சென்றேன். செப்டம்பர் 12ம் தேதி வரை அங்கு இருந்தேன். இந்த நாட்கள் பெரிய பயனுள்ளதாக அமைந்துள்ளது.
உலகில் புகழ்பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பு நடத்தினேன். இதில் 19 நிறுவனங்களுடன் தொழில் முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மகிழ்ச்சியான செய்தியை நான் கூறி கொள்ள விரும்புகிறேன். சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்கள், சிகாகோவில் 11 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,618 கோடி முதலீடு தமிழகத்துக்கு குவிந்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 11,516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications