அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்.. பாஜக விளம்பரத்துக்காக எதையும் செய்யும்.. விசிக ரவிகுமார் சாடல்
சென்னை: கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அமைச்சரின் இச்செயல் மனிதத் தன்மையற்ற அணுகுமுறை என்றும், பாஜக தங்களது விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க தயங்க மாட்டார்கள் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் தெவித்துள்ளார்.
கோவை, கொடிசியாவில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசுகையில், “ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.” என்று கூறினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா சீனிவாசனும் இருக்கிறார். அப்போது, அவர் நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் கூறியுள்ளதாவது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வணிகர்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கோவை அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பங்கேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள சில குளறுபடிகளை எடுத்துக் கூறினார். அவர் உண்மைக்கு மாறாகவோ, தவறாகவோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் சொன்ன கருத்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வைரலானது.
இதனால், அவரை மிரட்டி அழைத்து வந்து மன்னிப்பு கேட்கச் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் அப்படி மன்னிப்பு கேட்பதை அவருக்குத் தெரியாமலே படம்பிடித்து வீடியோவாகவும், புகைப்படமாகவும் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மட்டும் அவமதிப்பதாகாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்துகிற கொடூர, குரூரச் செயல்.
இது நிதியமைச்சர் சீதாராமனின் மனிதத் தன்மையற்ற அணுகுமுறையாகப் பார்க்க வேண்டியதில்லை. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேபோல, தலைமை நீதிபதி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜையை நடத்தியுள்ளார். அந்தப் பூஜைக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளார். அவரும் அதில் பங்கேற்று பூஜையை நடத்தியுள்ளார். இது அவர்களது தனிப்பட்ட நிகழ்வு.
ஆனால், இதனை படம்பிடித்து, வீடியோகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஆனால், இதனையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தலைமை நீதிபதிக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி, அவருடைய நேர்மையையே சந்தேகப்படும் அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். பாஜகவினர் பிரதமராக இருந்தாலும் சரி, நிதியமைச்சராக இருந்தாலும் சரி தங்களது விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்கவும், சங்கடத்தில் ஆழ்த்தவும் தயங்க மாட்டார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டியிருக்கிறது.
பிரதமர் பூஜையில் பங்கேற்றத்தை ஊடகங்களில் வெளியிட்டுள்ளதையும், அன்னபூர்ணா குழும உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்து வருத்தம் கேட்ட நிகழ்வை ஊடகங்களில் வெளியிட்டது நாகரீகமானது அல்ல. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications