கோவையில் 1000 கோடி, திருப்பூரில் 500 கோடி.. மொத்தம் 2500 கோடி போச்சு.. சிறு குறு நிறுவனங்கள் பந்த்
சென்னை: பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தினால் ரூ.2500 கோடி இழப்பீடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. தொழில் துறை அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக திருப்பூர் தொழில்துறை அறிவித்திருந்தனர். தற்போது மின்சார நிலைக் கட்டணம் தொடர்பான ஆணை வெளியாகியிருந்தாலும் பீக் ஹவர் சலுகை அறிவிக்கப்படாததால் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்தல், மின்சார நிலை கட்டண உயர்வை திரும்பப்பெறுதல், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வரின் புதிய உத்தரவு தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல ஆண்டு கட்டண (Multi Year Tariff) மின்கட்டண மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சமர்ப்பித்தது. இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட முதல்வர் அறிவுறுத்தினார்.
ஆனால், மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி திட்டமிட்டப்படி நாளை போராட்டம் நடைபெறும் என்று குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அறிவித்தனர். அதன்படி இன்றைய தினம் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட பல நகரங்களில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக ரூ. 2500 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கோவையில் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 1000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதே போல திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்களும், சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களும் கம்பெனிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார். மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படுமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications