அம்பானி சொத்து பல மாநிலங்களை விட அதிகம்! மிஞ்சியது இந்த 4 மாநிலம் மட்டுமே! லிஸ்டில் தமிழகம் இருக்கா?
சென்னை: இந்தியாவில் பணக்கார குடும்பத்தினர் குறித்த லிஸ்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இதில் இந்தியாவில் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பட்டத்தை அம்பானி பெற்றிருந்தார். இந்தியாவில் 4 மாநிலங்களின் ஜிடிபி மட்டுமே அம்பானி குடும்பத்தினர் சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் Hurun என்ற அமைப்பு செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும். இந்த அமைப்பு இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய செல்வந்தர்கள் குறித்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டு Hurun India Rich List 2025 கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் பல ஆச்சரியங்கள் இருந்தது.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், ரூ.9.55 லட்சம் கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் பணக்காரராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அம்பானி குடும்பத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 8.14 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையே தான் இந்தியாவின் டாப் கோடீஸ்வரர் என்ற பட்டத்தைப் பிடிக்கக் கடும் போட்டி நடக்கிறது.
கடந்த ஆண்டு வெளியான இதே பட்டியலில் கௌதம் அதானி ரூ. 11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்திருந்தார். அப்போது அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இருவரது சொத்து மதிப்பும் குறைந்திருந்தாலும், முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்த இடம்
இவர்களுக்கு அடுத்து ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். ஹெச்.சி.எல் ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் ரோஷினி நாடார் குடும்பம் இந்த டாப் 3 இடங்களில் நுழைவது இதுவே முதல்முறை.. ரூ.2.84 லட்சம் கோடி நிகர மதிப்புடன், ரோஷினி நாடார் இந்தியாவின் பணக்காரப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள் தான் இந்த ரோஷினி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 மாநிலம் மட்டுமே
இதில் நாம் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். அதாவது இந்தியாவில் வெறு 4 மாநிலங்களின் ஜிடிபி மட்டுமே அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய நான்கு மாநில ஜிடிபி மட்டுமே அம்பானி சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கிறது.
இதில் மகாராஷ்டிரா ₹24.11 லட்சம் கோடியுடன் இந்தியாவிலேயே அதிக ஜிடிபி கொண்ட மாநிலமாக இருக்கிறது. அடுத்து தமிழ்நாடு.. ₹15.71 லட்சம் கோடியுடன் தமிழ்நாடு இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தலா சுமார் ₹14.23 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நான்கு மாநிலங்களின் பொருளாதாரம் மட்டுமே, அம்பானி குடும்பத்தின் மொத்தச் சொத்து மதிப்பை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான ஜிடிபி
மற்ற மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பை விடக் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, மேற்கு வங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹9.04 லட்சம் கோடியாக இருக்கிறது. அதேபோல், ராஜஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹8.45 லட்சம் கோடி, ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹8.21 லட்சம் கோடி மற்றும் தெலங்கானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹7.93 லட்சம் கோடி ஆகும்.












Click it and Unblock the Notifications